யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரசியல் கட்சிகள் உயிரினங்களைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஊர்வலமாக அழைத்துச் சென்று, அதன் மூலம் அவற்றைக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக வனவிலங்கு உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டே வனவிலங்குகளை, பறவைகளை கட்சியின் சின்னமாக வைப்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் சீமான் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
புலியை சின்னமாக கேட்டேன். அதை தேசிய விலங்கு என்று கூறி மறுத்து விட்டனர். யானையை, காளை மாட்டைக் கேட்டேன். அதையும் கொடுக்கவில்லை. ஆனால் தேசிய சின்னமான தாமரையை மட்டும் பாஜகவிற்கு கொடுத்துள்ளனர் - சீமான்
விரிவான விளக்கம்
2026 சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புலியை சின்னமாக கேட்டேன். அதை தேசிய விலங்கு என்று கூறி மறுத்து விட்டனர். யானையை, காளைமாட்டைக் கேட்டேன். அதையும் கொடுக்கவில்லை. ஆனால் தேசிய சின்னமான தாமரையை மட்டும் பாஜகவிற்கு கொடுத்துள்ளனர் என்று பிரச்சாரத்தின் போது பேசியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
அரசியல் கட்சிகள் உயிரினங்களைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஊர்வலமாக அழைத்துச் சென்று, அதன் மூலம் அவற்றைக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக வனவிலங்கு உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டே வனவிலங்குகளை, பறவைகளை கட்சியின் சின்னமாக வைப்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பதை ND TV வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமே, இவ்வாறு தேர்தல் ஆணையம் விலங்குகளை தேர்தல் சின்னமாக அறிவிக்கக் கூடாது என கடந்த 1991 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது என சன் நியூஸ் ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே விலங்குகளை சின்னமாக வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி (யானை சின்னம்), அகில இந்திய பார்வர்டு பிளாக் (புலி சின்னம்) போன்ற கட்சிகள் அதே சின்னங்களில் போட்டியிடுவதை தொடரலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போன்று 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவின் படி, வனவிலங்குகளை, பறவைகளை பிரச்சாரங்களில் பயன்படுத்தவே கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புலியை சின்னமாக கேட்டேன். அதை தேசிய விலங்கு என்று கூறி மறுத்து விட்டனர். யானையை, காளை மாட்டைக் கேட்டேன். அதையும் கொடுக்கவில்லை. ஆனால் தேசிய சின்னமான தாமரையை மட்டும் பாஜகவிற்கு கொடுத்துள்ளனர் என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.
மேலும் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று சீமான் கூறும் தகவலும் தவறானதே. பள்ளி பாடப்புத்தகங்களில் தொடங்கி அனைத்து குறிப்பேடுகளிலும் தாமரை இந்தியாவின் தேசிய மலர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் தேசிய மலர் என்று எதுவும் கிடையாது என்பதே உண்மை. தேசிய கீதம், சின்னம், விலங்கு, பறவை முதலானவை மட்டுமே உள்ளன. தேசிய மொழி, தேசிய விளையாட்டு, தேசிய மலர் என எதுவும் கிடையாது. இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இந்தியாவின் தேசிய மலர் தாமரை இல்லை.
முடிவு:
நம் தேடலில், வனவிலங்குகளை, பறவைகளை கட்சியின் சின்னமாக வைப்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.