யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, மேற்கு வங்கத்தில் ’BJYM’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்காக திரண்ட கூட்டம் என்று தவறாக திரித்து பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
Claim 1: அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் #காவி போராளிகள்

Claim 2: நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என மேற்குவங்கத்தில் களத்தில் இறங்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் & பஜ்ரங் தள் அமைப்புகள்..!

Claim 3: மேற்கு வங்கத்தில் களமிறங்கிய இந்திய இராணுவம்!

விரிவான விளக்கம்
மேற்கு வங்கம் மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் 'வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு' எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, 'இந்துக்களின் நிலை மோசமடைந்து வருவதாக' கூறி பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) சார்பில் 19/04/25 அன்று ‘வங்காள இந்துக்களை பாதுகாப்போம்’ என்ற பெயரில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு கல்கத்தா உயர் நீதிமன்றமும் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடக்கவிருந்த இந்த பேரணிக்கு இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து இந்துத்துவ ஆதரவாளர்கள் அலை அலையாக வந்ததாகவும், இதனால் மேற்கு வங்கத்தில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும் பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் #காவி போராளிகள் 🔥🔥#மேற்குவங்காளம் #ஹிந்து மக்களை காக்க மிக பெரிய படையே சென்று கொண்டு இருக்கிறது...
இனிமேல் ஹிந்துக்கள் மீது எவனும் கை வைக்க கனவிலும் நினைக்க மாட்டார்கள்...
ஜெய்ஸ்ரீராம்!..ஜெய்ஸ்ரீராம்..!! pic.twitter.com/EHBwRvwLbk
🧐👇🏽🤨 நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என மேற்குவங்கத்தில் களத்தில் இறங்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் & பஜ்ரங் தள் அமைப்புகள்..!🚩 pic.twitter.com/kF47psHQN4
உண்மை என்ன?
Claim 1: ‘அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள்’ என்று ஒரு வீடியோவை பாஜகவின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி பரப்புகிறார்.

உண்மை: இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. அதில் பரப்பப்படும் இந்த காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் கீழ் ‘ஸ்ரீ ஷிவ் பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான், கட்கோட் மோஹிம் 2025’ என்ற குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
இதிலிருந்து, இது மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் என்ற இடத்தில் உள்ள கோட்டையை நோக்கி 2025 பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட 'காட்கோட் மோஹிம்' என்ற ஊர்வலமாகும் என்பது தெரியவருகிறது. இது ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். பரப்பப்படும் வீடியோ 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'காட்கோட் மோஹிம்' ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டதாகும். சிவாஜி மகாராஜின் மராத்திய பேரரசின் நினைவை குறிக்கும் வகையில் இது நடத்தப்படுகிறது.

மேலும் தேடியதில், இந்த ஊர்வலம் ’சம்பாஜி பிடே’ என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுவதாகும். சம்பாஜி பிடே 'ஸ்ரீ ஷிவ் பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான்' என்ற வலதுசாரி அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்த அமைப்பு மராத்திய இனப் பெருமையையும் இந்து மத பெருமையையும் பரப்பும் வலதுசாரி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த பேரணியை வங்கத்தில் ’BJYM’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியோடு தொடர்புபடுத்தி தவறாக பரப்பிகிறார்கள் என்பது தெளிவாகிறது.
Claim 2: விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் மேற்கு வங்க பேரணிக்கு அணி வகுத்துச் செல்வதாக பரப்பப்படுகிறது.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Deb kumar Mudi’ என்ற யூட்யூப் பக்கத்தில் இந்த காட்சியை கொண்டிருக்கும் வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோ 2023 ஏப்ரல் மாதம் (அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்) பதிவேற்றப்பட்டதாகும்.

இதிலிருந்து, வீடியோவில் காட்சிபடுத்தப்படும் பைக் பேரணிக்கும் மேற்கு வங்கத்தில் நடத்தப்படவிருந்த பேரணிக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது தெளிவு.
Claim 3: ‘மேற்கு வங்கத்தில் களமிறங்கிய இந்திய இராணுவம்’ என்று பரப்பப்படும் வீடியோ.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘newsbugz_official’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. அதன்படி, கடந்த 2024 ஜீலை 30ஆம் தேதியன்று கேரளா மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டபோது, மீட்புப் பணிக்காக வந்திருந்த இராணுவ வீரர்கள் மீட்புப் பணி முடிந்து விடைபெற்றுச் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ’ என்று தெரியவருகிறது.

இந்த வீடியோவிற்கும் மேற்கு வங்கத்தில் ’BJYM’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கும் தொடர்பு ஏதுமில்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, மேற்கு வங்கத்தில் ’BJYM’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வங்காள இந்துக்களை பாதுகாப்போம்’ என்ற பேரணிக்காக திரண்ட கூட்டம் என்று தவறாக திரித்து பரப்பிவருகிறார்கள் பாஜகவினர் ஆதரவாளர்கள். வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இந்த போலிச் செய்திகள் பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.