யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியர்கள் ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய அரபு அமீரகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கோல்டன் விசா விண்ணப்பங்களுக்கான ஆலோசனை சேவைகளை வழங்கி வரும் “ராயத் குழுமம்” தான் இத்தகைய தவறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
"கோல்டன் விசா - ரூ.23 லட்சம்" "ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம்" குடும்பத்துடன் நிரந்தரமாக செட்டில் ஆக விரும்பும் இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

விரிவான விளக்கம்
2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், நல்ல திறமை படைத்த மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.23 லட்சம் செலுத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா பெற்றுக் கொள்ளலாம் என்றும், குடும்பத்துடன் நிரந்தரமாக செட்டில் ஆக விரும்பும் இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு என்றும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
யு.ஏ.இ., கோல்டன் விசா பெறுவது எப்படி?https://t.co/ieR7J3b7AL#GoldenVisa #dinamalar pic.twitter.com/ZHOnABgMU1
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஊடகமான KHALEEJ TIMES ஜூலை 8, 2025 அன்று “தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டினருக்கு கோல்டன் விசா வழங்குவது தொடர்பான வதந்திகளை ஐக்கிய அரபு அமீரகம் மறுக்கிறது” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பல நாட்டினருக்கும் கோல்டன் விசா வழங்குவதாக சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் ஜூலை 9 , 2025 அன்று KHALEEJ TIMES ஊடகத்தில் “நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்: வாழ்நாள் கோல்டன் விசா தொடர்பான குழப்பத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழு முழு பொறுப்பேற்கிறது” என்ற தலைப்பில் வெளியான மற்றொரு செய்தியையும் பார்க்க முடிந்தது. அதில் கோல்டன் விசா விண்ணப்பங்களுக்கான ஆலோசனை சேவைகளை வழங்கி வரும் “ராயத் குழுமம்” தான் இத்தகைய தவறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தவறான அறிவிப்புக்கு, ராயத் குழுமம் மன்னிப்பும் கோரியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் FINANCIAL EXPRESS ஊடக பக்கத்திலும், ரூ.23 லட்சத்திற்கு கோல்டன் விசா என்பது ஒரு வதந்தி என்று UAE அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது.

கோல்டன் விசா குறித்து UAE-ன் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கமான icp . gov. ae தேடி பார்த்தோம். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா என்பது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு நீண்டகால விசா திட்டம் என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவிற்காக (5 முதல் 10 ஆண்டுகள்) தற்போது குறைந்தபட்சம் 2 மில்லியன் AED (சுமார் ₹4.66 கோடி) முதலீடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பத்திருந்தது.

முடிவு:
நம் தேடலில், இந்தியர்கள் ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது என்பது தெரியவந்தது.