யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்டனர். இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல.
பரவிய செய்தி
மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 80 லட்சம் பெண்கள் அதிரடி நீக்கம்..!!
#TVKFails


விரிவான விளக்கம்
விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், முந்தைய திமுக ஆட்சியில் நடைமுறைபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் 80 லட்சம் பெண்களை அத்திட்டத்தில் இருந்து தவெக அரசு நீக்கியுள்ளதாகவும், புதிய பயனாளிகள் யாரும் அத்திட்டத்தில் சேரமுடியாது என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
‘மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்’ இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’மாலை மலர்’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில் ‘மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை ‘News 18 தமிழ்நாடு’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் ’க்ருகா லட்சுமி திட்டம்’ என்ற பெயரிலும், டெல்லி மாநிலத்தில் ’மகிலா சம்ரிதி யோஜனா’ என்ற பெயரிலும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 'முக்கியமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா' என்ற பெயரிலும் பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் பணம் வரவு வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 'முக்கியமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் 2.46 கோடி பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திட்டப் பயனாளிகளை தணிக்கை செய்ய e-KYC நடைமுறையை மகாராஷ்ட்ரா அரசு கட்டாயமாக்கியது. இதற்கு 2026 ஏப்ரல் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலத்திற்குள் e-KYC சரிபார்ப்பை முடிக்காத 80 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் மகாராஷ்ட்ரா அரசு கூறியுள்ளதாக தெரிகிறது.
இதிலிருந்து, மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக திரித்து பரப்புகிறார்கள்.