யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது சமீபத்திய செய்திதான். ஆனால் அந்த புகைப்படம் பழைய புகைப்படம் தான்.
பரவிய செய்தி
’தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததற்காக மூன்று பேரை சமீபத்தில் போலீஸ் கைது செய்ததாக திமுகவினர் பொய் செய்தி பரப்புகிறார்கள்’ - தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர்.

விரிவான விளக்கம்
திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரொக்க பணத்தையும் லாட்டரி சீட்டுகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது என்று லாட்டரி சீட்டு புகைப்படத்துடன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இதனை மறுத்து இவ்வாறு லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படுவது பழைய செய்தி என்றும் அந்த புகைப்படத்தில் உள்ள லாட்டரி சீட்டுகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றும் திமுகவினர் பொய் செய்தியை பரப்புவதாகவும் தவெக மாநில சமூக ஊடக அணியினர் பதிவிட்டுள்ளனர்.
சோறு தான் திங்கறீங்களா இல்ல வேற ஏதாவதா.
தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்ப திமுக திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் இந்த தீய சக்திகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். https://t.co/9LlQePqZus pic.twitter.com/ybokkgbhTc
உண்மை என்ன?
சமீபத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக கைதுகள் ஏதேனும் நடந்திருக்கிறதா என்று செய்திகளை தேடினோம். ‘Sun News’ சமூக வலைத்தள பக்கத்தில் மே 14ஆம் தேதி (இன்று) வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது.
#NewsUpdate | லாட்டரி விற்ற மூவர் கைது!#SunNews | #Lottery | #Thiruvarur pic.twitter.com/wIWgLGi90U
அதில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்ததாகவும், அவர்களிடமிருந்து ரூ.2.43 லட்சம் பணம் மற்றும் 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே செய்தியை ’தினகரன்’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது.
அதேநேரத்தில், சமூக வலைத்தள பதிவில் உள்ள லாட்டரி சீட்டு புகைப்படம் ஏற்கனவே இணையத்திலும் சமூக வலைத்தளத்திலும் உள்ள பழைய புகைப்படம் தான் என்பதையும் காணமுடிகிறது.
இதிலிருந்து, லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய செய்தி அல்ல, சமீபத்திய செய்திதான், ஆனால் அதனை பதிவிடும் போது இணைக்கப்பட்ட புகைப்படம் பழைய புகைப்படம் தான்.
முடிவு:
லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய செய்தி என்று தவெக சமூக ஊடக அணியினர் திரித்து தவறாக பரப்பி வருகிறார்கள்.