யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தர்கா அருகில் தீபம் ஏற்றுவது குறித்து 2014ல் தொடர்ப்பட்ட வழக்கை எதிர்த்து அதிமுக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் புகழேந்தி வாதாடினார்.
பரவிய செய்தி
”அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து மகா சபை வழக்கு தொடுத்த போது அதனை நீதிமன்றத்தில் அதிமுக அரசு எதிர்க்கவில்லை” - கோவை சத்யன், அதிமுக.
விரிவான விளக்கம்
’தந்தி டிவி’ நடத்திய ’ஆயுத எழுத்து: மக்கள் முன்னால்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர், ’திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றும் சர்ச்சையில் திமுக எடுத்த அதே நிலைப்பாட்டை தான் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் எடுத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தர்கா அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவவாதிகளால் வழக்கு தொடுக்கப்பட்ட போது ஜெயலலிதா அதை எதிர்த்தார்’ என்று கூறினார். ஆனால் இதனை மறுத்து பேசிய அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன், ‘சரவணன் சொல்வது பச்சைப் பொய் என்றும் தர்கா அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் அதிமுக அரசு வாதிடவில்லை’ என்றும் கூறினார். மேலும், ’2004 இதுபோல் தீபம் ஏற்றுவதில் சர்ச்சை ஏற்பட்ட போது, ஜெயலலிதா இரு தரப்பினரையும் அழைத்து பேசி தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றிக்கொள்வது குறித்து சமரசம் செய்து வைத்தார்’ கோவை சத்யன் கூறிகிறார்.
உண்மை என்ன?
சிக்கந்தர் தர்கா அருகில் தொடரப்பட்ட வழக்குகள் பற்றி செய்திகளை தேடினோம். ‘மின்னம்பலம்’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, 1996-ல் இது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2014 அதிமுக ஆட்சியில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

‘The Hindu’ செய்தித்தளத்தில் 2016 ஏப்ரல் மாதம் வெளியான செய்தியில், தர்கா அருகில் தீபம் ஏற்றுவது குறித்து 2014ல் தொடர்ப்பட்ட வழக்கில் ”மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் புகழேந்தி, ’மலை மீது தீபம் ஏற்றுவது குறித்து முடிவெடுக்கும் உரிமை கோவில் நிர்வாகத்திற்கு தான் உண்டு என்றும்; இதனை ஒரு தனியார் நிறுவனம் (இந்து மகா சபை) உரிமை கோர முடியாது’ என்றும் மறுத்து வாதாடியுள்ளார். மேலும் இது குறித்த 1996ஆம் ஆண்டு தீர்ப்பையும் சுட்டிக்காட்டு வாதாடினார்.

அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் என்பது அரசின் வாதம் தானே. உண்மை இவ்வாறு இருக்க திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அதனை அதிமுக அரசு நீதிமன்றத்தில் எதிர்த்து வாதாடவில்லை என்று கோவை சத்யன் பொய்யான தகவலை கூறிகிறார்.
மேலும், ’தர்கா எல்லையில் இருந்து குறைந்தது 15 மீட்டர் தாண்டி ஒட்டுமொத்த மலைப்பகுதியில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் முடிவு எடுக்கலாம்’ என்பது 1996 நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள உத்தரவாகும். ஆனால் இந்த தீர்வை எதோ ஜெயலலிதா இரு தரப்பையும் கூட்டி பேச்சு வார்த்தை நடத்தி எட்டியதைப் போல் பரப்புகிறார் கோவை சத்யன்.
முடிவு:
அதிமுக ஆட்சியில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றவது குறித்து இந்து மகா சபை தொடர்ந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் அதிமுக அரசு வாதாடவில்லை என்று கோவை சத்யன் பொய்யான தகவலை பரப்புகிறார்.