யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன் தவறான தகவலைத் திரித்துப் பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
போகும் இடம் எல்லாம் செருப்படி வாங்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி காங்கிரஸ்.
வாக்களிக்கும் மக்களை மரியாதை இல்லாமல் உனக்கு என்னயா தெரியும்? இந்த வேலை எங்கிட்ட வச்சிக்காத என்று மிரட்டுவது திமுக திராவிட மாடல்.
மக்களின் பதில் இன்று களத்தில்.
திமுகவின் முடிவு உறுதி.

விரிவான விளக்கம்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், பிரச்சாரத்துக்கு செல்லும் போது மக்களை மரியாதை இல்லாமல் பேசுவதாக அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
போகும் இடம் எல்லாம் செருப்படி வாங்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி காங்கிரஸ்.
வாக்களிக்கும் மக்களை மரியாதை இல்லாமல் உனக்கு என்னயா தெரியும்? இந்த வேலை எங்கிட்ட வச்சிக்காத என்று மிரட்டுவது திமுக திராவிட மாடல்.
மக்களின் பதில் இன்று களத்தில்.
திமுகவின் முடிவு உறுதி. pic.twitter.com/6ungeBdoYY
உண்மை என்ன?
பரவி வரும் அந்த வீடியோவில், திருவள்ளூர் காங். வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து உளுந்தை கிராமத்தில் எம்எஸ்ஏ ராஜேந்திரன் பிரசாரம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதன்படி இது குறித்து எங்களது தேடலை தொடங்கினோம்.
அப்போது Thanthi TV ஊடகத்தில், "தொகுதிக்கு என்ன பண்ணீங்க.." "ஏய், இங்க வா... இங்க வந்து பேசு" கேள்விகேட்ட மக்கள் Vs கொந்தளித்த MLA” என்ற தலைப்பில் ஏப்ரல் 01, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. சரியாக 01:04வது நிமிடத்தில் பரவி வரும் வீடியோவுடன் செய்தி இடம்பெற்றிருந்தது.
அதில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக வாக்குசேகரிக்க, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது, உளுந்தை கிராமத்திற்கு திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் எதுவும் செய்யவில்லை என்று கூறி பொதுமக்கள் அவரிடம் நேரில் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வருவது கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன் தவறான தகவலைத் திரித்துப் பரப்பி வருகிறார்.