யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024-25 நிதியாண்டிலே இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதவாக இருந்திருக்கிறது.
பரவிய செய்தி
விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 42 சதவீதத்தை தொட்டு, இந்தியாவிலே வேகமாக வளரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

விரிவான விளக்கம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தவெக கட்சி முதல்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு 62 நாட்கள் மட்டும் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு இந்தியாவிலே வேகமாக வளரும் ஏற்றுமதி மாநிலமாக மாறியுள்ளதாகவும், தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் 42 சதவீதமாக வளர்ந்துள்ளதாகவும் ‘Karnataka Times’ என்ற இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதியில் நிகழ்ந்துள்ள வளர்ச்சி குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’DT Next’ செய்தித்தளத்தில் 2025 ஏப்ரல் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், ’2023-24 நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலர்களாக இருந்த தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி 2024-25 நிதியாண்டில் 53 சதவீதம் வளர்ச்சி பெற்று 14.65 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும்; இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.23 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

’THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி, ’மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாடு முந்தைய ஆண்டின் (2024-25) 14.65 பில்லியன் டாலர்களில் இருந்து 22.8 சதவீதம் வளர்ந்து 18 பில்லியன் டாலர்களாக உயரும்’ என்று அப்போதைய தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா கூறினார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2024-25 நிதியாண்டிலே இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதவாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும், மேற்கூறிய செய்திகளைப் போல் குறிப்பான நிதியாண்டு எதையும் குறிப்பிடாமல், இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாடு 42 சதவீதம் இருப்பதாக ’Karnataka Times’ செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு:
விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பொய்யான செய்தியை ‘Karnataka Times’ ஊடகம் பரப்பிவருகிறது.