யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கலைஞர் முதன்முதலில் சென்னை வரும்போது இரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாகப் பல ஆண்டுகளாக அரசியல் தளத்தில் சொல்லப்படுவதுண்டு. இது ஒரு பொய் பிரச்சாரம்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் முதன்முதலில் சென்னைக்கு வரும்போது ரயிலில் டிக்கெட் எடுக்காமல் without-ல் வந்ததாக நீண்டகாலமாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுவதுண்டு.
இதே விஷயத்தை தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளர் பாலாஜி முருகதாசும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கான ஆதாரம் ’கண்ணதாசன் சுயசரிதை வனவாசம்’ என்ற புத்தகத்தில் இருப்பதாக மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Thevaiya? https://t.co/fkvFcTpeHq pic.twitter.com/LmNYkSpKZ1
— Balaji Murugadoss (@OfficialBalaji) August 23, 2024
அதில், “அடுத்த நாளே அவன் சென்னைக்கு ரயிலேறிவிட்டான் 'டிக்கட்' இல்லாமல் ரயிலில் பிரயாணம் செய்வது தவறு என்பது அவனுக்கும் தெரியும். அவனிடம்தான் பண மில்லையே, அவன் என்ன செய்வான்? ரயிலின் அவனும் ஏறி உட்கார்ந்து கொண்டான்” என்றுள்ளது. அப்புத்தகத்தில் அவன் என்று குறிப்பிட்டுள்ளது கலைஞரைத்தான் என பாலாஜி கூறுகிறார்.
உண்மை என்ன?
கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தில் ’என்னுரை’ பகுதியை கண்ணதாசன் தான் எழுதியுள்ளார். அதில் (பக்கம்.5), “நான் நடந்துவந்த பாதை, தனி வாழ்வில் நான் பட்ட துயரங்கள், இவையெல்லாம் ஒரு கதைபோல இருப்பதாக நான் கருதினேன். ஆகவே, வேறு கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கதை எழுதுவதைவிட, என்னையே பாத்திரமாக்கி உண்மையைக் கதை வடிவில் சொல்ல நான் விரும்பினேன். அந்த முயற்சியே இந்த நூலாக எழுந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தனது சொந்த வாழ்க்கை பற்றிக் கதை வடிவில் எழுதியதாகவே கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி 6-வது பக்கத்தில், “ ’நான்’ என்று எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே ’அவன்’ என்று என்னைக் குறிப்பிட்டேன்” என்று கூறியுள்ளார். அதாவது தன்னைத்தானே மூன்றாம் நபரை குறிப்பிடுவதுபோல் ’அவன் வந்தான், அவன் சென்றான்’ எனப் புத்தகத்தில் எழுதி இருப்பதாக கூறியுள்ளார்.

மேற்கண்ட ஆதாரங்களில் இருந்துதான் டிக்கெட் எடுக்காமல் இரயிலில் சென்னை வந்தது பற்றியே கண்ணதாசன் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. ஆனால், இது கலைஞர் எனப் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
முடிவு:
இரயிலில் டிக்கெட் எடுக்காமல் கலைஞர் சென்னை வந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. கண்ணதாசன் தனது வனவாசம் என்ற புத்தகத்தில் தான் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்.
