யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிவாஜியின் கழுத்திலிருந்த நகையை மறைத்துவிட்டு, அது கலைஞரின் கழுத்தில் இருப்பது போன்று எடிட் செய்து பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கலைஞர் கருணாநிதியும் சிவாஜி கணேசனும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு இதில் உள்ள வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள் எனப் பரப்பப்படுகிறது. முதலில் உள்ள படத்தில் சிவாஜி கணேசன் கழுத்தில் தங்கச் சங்கிலி உள்ளது. அதற்கடுத்து இரண்டு நிமிட இடைவெளியில் எடுக்கப்பட்ட படத்தில் கலைஞரின் கழுத்தில் அந்த தங்கச் சங்கிலி உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவாஜியின் நகையைக் கலைஞர் எடுத்துக் கொண்டதாக இப்புகைப்படம் பரப்பப்படுகிறது.
2 நிமிடத்தில் வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் மக்களே😆 pic.twitter.com/7SBfbTqi9j
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தில் இரண்டாவதாக உள்ள படத்தில் சிவாஜியின் கழுத்தில் தழும்பு போன்று இருப்பதைக் காண முடிகிறது. இது சிவாஜியின் கழுத்திலிருந்த சங்கிலியை போட்டோஷோப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழித்ததின் மூலம் ஏற்பட்டதாகும்.
அதாவது, சிவாஜியின் கழுத்திலிருந்த நகையை மறைத்துவிட்டு, அது கலைஞரின் கழுத்தில் இருப்பது போன்று எடிட் செய்துள்ளனர்.
சிவாஜியும் கலைஞரும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்குமான நட்பு குறித்து சிவாஜி ஒரு மேடையில் பேசுகையில், ”திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக ஊர் ஊராக, தெருத் தெருவாக நாடகம் போட்டு வசூல் செய்தோமே அதைப்பற்றிப் பேசுவதா? அல்லது அங்கு உணவு கிடைக்காமல் தள்ளாடினோமே அதைப்பற்றிப் பேசுவதா? அல்லது அங்கிருந்து நாம் சென்னை வருவதற்குப் பணம் இல்லாமல் தவித்த போது உங்கள் விரலிலே இருந்த மோதிரத்தை விற்று நாம் வீடு வந்து சேர்ந்தோமே அதைப்பற்றிப் பேசுவதா?” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து சிவாஜியின் நகையைக் கலைஞர் எடுத்துக் கொண்டார் எனப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டுப் பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
சிவாஜியின் நகையைக் கலைஞர் எடுத்துக் கொண்டதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.
