யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வாடகைக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.
பரவிய செய்தி
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது த.வெ.க அரசு!

விரிவான விளக்கம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூற்றாண்டு நூலகத்தில் கலையரங்கம், கருத்தரங்கக் கூட்டம் நடத்தும் அறை, திறந்தவெளி அரங்கம், புத்தக வெளியிட்டு விழா நடத்தும் அறை ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தவெக அரசு புதிதாக ஆட்சிப்பேறுற்ற பிறகு அண்ணா நூலகத்தின் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி 5 லட்சம் வரை நிர்ணயித்து இருப்பதாக ‘கலைஞர் செய்திகள்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.
மூன்று மடங்கு கட்டண உயர்வு!
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது த.வெ.க அரசு!
ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்குப் பதிப்பாளர்களும்,… pic.twitter.com/4dTMpFUgI8
உண்மை என்ன?
’அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்’ உள்ள அரங்கங்களின் வாடகை குறித்து அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலே தேடினோம்.
அதில், 1280 இருக்கைகள் கொண்ட கலையரங்கத்தின் (Auditorium) ஒருநாள் வாடகை 2,31,224 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 200 இருக்கைகள் கொண்ட கருத்தரங்கக் கூடத்தின் (Conference Hall) ஒருநாள் வாடகை 7,637 ரூபாய் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 150 இருக்கைகள் கொண்ட புத்தக வெளியிட்டுக் கூடத்தின் ஒருநாள் வாடகை 2,264 ரூபாய் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தை (Administrative Office) ‘You Turn’ தரப்பில் இருந்து தொடர்புகொண்டு பேசினோம். "கலையரங்கம், புத்தக வெளியீட்டுக் கூடம், கருத்தரங்கக் கூடம் மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில் இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று நிர்வாகத்தின் தரப்பில் சொல்லப்பட்டது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கங்களை பயன்படுத்துவதற்கான வாடகைக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தவறானது என்பது தெரியவருகிறது.
முடிவு:
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கங்களை பயன்படுத்துவதற்கான வாடகைக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக ‘கலைஞர் செய்திகள்’ ஊடகம் வெளியிடப்பட்ட செய்தி தவறானது.