யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உறுதி செய்ய பாலிமர் ஊடகத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர். மேலும் பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது என்பதை பாலிமர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.
பரவிய செய்தி
மெயின் ரோடா இருந்தாலும் முதுகெலும்பு இருக்கு! அதிமுகவில் ஒரு மில்லி தன்மானமுள்ள ஒருவர் கூட இனி இருக்கமாட்டார்!

விரிவான விளக்கம்
கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமித்ஷாவின் வலதுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்க, இடதுபுறம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அமர்ந்திருந்தார். அப்போது பேசிய அமித்ஷா, "பா.ஜ.க தலைவர்களும் அ.தி.மு.க தலைவர்களும் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கப் போகிறது" எனத் தெரிவித்தார். இந்நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாக பாலிமர் செய்தி ஊடகத்தில் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டில் தேதி 11-04-2025 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிமரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்துத் தேடினோம். அதில் இதுபோன்ற NewsCard ஏதும் பதிவிடப்பட்டிருக்கவில்லை. மாறாக 12-04-2025 அன்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது என்பதை பாலிமர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் உறுதி செய்ய பாலிமர் ஊடகத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர்.
இதையடுத்து ஜெயக்குமார், நியூஸ் கார்டில் உள்ள செய்தி குறித்து ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அத்துடன், ஜெயக்குமாரின் சமூக வலைத்தள பக்கங்களை ஆய்வு செய்தபோதும், அதுபோன்ற எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பதை உறுதி செய்தோம்.

Keywords கொண்டு இணையத்தில் தேடிய போதும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியிலிருந்து தான் விலகுவதாக ஜெயகுமார் கூறியதாக எந்தவொரு செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்தி ஒன்று நவம்பர் 11, 2024-ல் இந்து தமிழின் இணையதள பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதில் பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை என்றும், இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இது எதிர்காலத்திலும் தொடரும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பும் இதே கருத்தை ஜெயகுமார் கூறியதாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று பரப்பப்பட்டது. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: https://youturn.in/factcheck/fake-news-card-is-being-circulated-about-Jayakumars-resignation.html
முடிவு :
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகிவிடுவேன் என ஜெயக்குமார் சொன்னதாகப் பரவும் பாலிமர் செய்தி ஊடகத்தின் நியூஸ் கார்டு போலியானது.