யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 2.5% State GST, 2.5% Central GST என்று மொத்தமாகவே 5% தான் வரி விதிக்கப்படுகிறது.
பரவிய செய்தி
LPG சிலிண்டருக்கு ஒன்றிய அரசு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு மாநில வரியாக 55 சதவீதம் வரி விதிக்கிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் சிலிண்டர் விலை அதிகமாக உள்ளது.

Whatsapp Forward
விரிவான விளக்கம்
இஸ்ரேல் - அமெரிக்கா சேர்ந்து ஈரானை தாக்கியதால் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வலைகுடா பகுதி போர் சூழலாக மாறியுள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி கடந்த மார்ச் 7ஆம் தேதி ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 60 ரூபாய் வரை உயர்த்தியது.
இந்நிலையில், ‘LPG சிலிண்டருக்கு ஒன்றிய அரசு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு மாநில வரியாக 55 சதவீதம் வரி விதிக்கிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் சிலிண்டர் விலை அதிகமாக உள்ளது’ என்று Whatsapp-ல் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
சமையல் எரிவாயு சிலிண்டர் மீது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் எவ்வளவு வரிவிதிக்கின்றன என்று தேடினோம். இது குறித்து, நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத் துறைக்கான இணையமைச்சர் சுரேஷ் கோபி அளித்துள்ள பதிலை காணமுடிந்தது.

கடந்த 2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவிற்கு மொத்தமாகவே 5 சதவீதம் GST வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. அதில் சரி பாதியாக 2.5% State GST, 2.5% Central GST ஆகும். விநியோகஸ்தர்களுக்கான கமிஷனாக (Distributors Commission) 73.08 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாநிலங்கள் வாட் (VAT) வரி விதிப்பது போல எரிவாயுவிற்கு தனியாக வாட் வரி விதிப்பதில்லை.
இதன்படி, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் 853 ரூபாயாக இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு 20.31 ரூபாய் மட்டுமே வரியாக கிடைத்தது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் மீது தமிழ்நாடு அரசு மட்டுமல்ல எல்லா மாநில அரசுகளும் பொதுவாக 2.5 சதவீத State GST மட்டுமே விதித்துள்ளது என்பதும் அது தவிர வேறெதும் வரிகள் விதிக்கவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசு எரிவாயு மீது 55 சதவீதம் வரி விதிப்பதாகவும் ஒரு சிலிண்டருக்கு 319 ரூபாய் வரியாக வசூலிப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.