யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தடை செய்யப்பட்ட 15 மருந்துகளில் ’அபான் பார்மாசூட்டிகல்ஸ்’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ’போமோல்-650’ என்ற பாராசிட்டமால் மத்திரை மட்டுமே உள்ளடங்கும்.
பரவிய செய்தி
‘பாராசிட்டமால் 650 மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஆய்வுகளின் முடிவில் பாராசிட்டமால் 650 மாத்திரை உள்பட 14 மருந்துகள் ஆபத்தான வகையை சேர்ந்தது என தெரியவந்திருப்பதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இந்த மருந்துகளை விற்பதோ, சேமித்து வைப்பதோ கூடாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.’ - Way2News

விரிவான விளக்கம்
'கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை' 15 மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு மற்றும் விநியோகத்தைத் தடை செய்ததாக கடந்த ஜீன் 26ஆம் தேதி செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ‘பாராசிட்டமால் 650 மாத்திரையும்’ தடைசெய்யப்பட்டுள்ளதாக ’Way2News’ என்ற இணைய செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், Orion என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ’Brexodol 650’ என்ற பாராசிட்டமால் மாத்திரையின் படத்தை இந்த செய்திக்காக பயன்படுத்தியுள்ளது Way2News’ செய்தித்தளம். இவ்வாறு அனைத்து விதமான ‘பாராசிட்டமால் 650’ மாத்திரைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாராசிட்டமால் 650–க்கு திடீர் தடை..! https://t.co/InpZBasAKF pic.twitter.com/jfkC6ZBP1X
உண்மை என்ன?
கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட மருத்துப் பொருட்கள் தடைசெய்யப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ‘INDIA TODAY’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 15 மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதித்தது பற்றியும், குறிப்பிட்ட ஒரு ‘பாராசிட்டமால்’ brand-ம் அதில் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அதில் ’அபான் பார்மாசூட்டிகல்ஸ்’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ’போமோல்-650’ என்ற பாராசிட்டமால் மாத்திரை தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மாதிரி சோதனைகளைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 15 மருந்துகள் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் குறிப்பிட்ட Batch-ஐ சேர்ந்த மருந்துகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மருந்தகங்கள் இந்த மருந்துகளை விற்பனை செய்யவோ சேமித்து வைக்கவோ கூடாது என்றும், அதிகாரிப்பூர்வமாக அடுத்தகட்ட அறிவிப்புகள் இது குறித்து வரும் வரையில் இந்த அறிவிப்பை கடைபிடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதில் எங்குமே அனைத்து விதமான ’பாராசிட்டமால் 650’ மாத்திரைகளை தடை செய்யப்படுவதாக சொல்லப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு மருந்து நிறுவனம் தயாரிக்கும் ’போமோல்-650’ என்ற பிராண்ட் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கிறது தெரியவருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அனைத்து விதமான பாராசிட்டமால் 650 மாத்திரைகளும் தடை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது தவறான செய்தியாகும்.
முடிவு:
’அபான் பார்மாசூட்டிகல்ஸ்’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ’போமோல்-650’ என்ற பாராசிட்டமால் மாத்திரை செய்யப்பட்டதை, அனைத்து விதமான பாராசிட்டமால்-650 மத்திரைகளும் கர்நாடகாவில் தடைசெய்யப்பட்டதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.