யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய மின்சார உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
பரவிய செய்தி
கடந்த 5 ஆண்டுகளில் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கூடப் புதிதாக உற்பத்தி செய்ய இயலாத திமுக அரசு,
ஆளுநர் உரையைப் பயன்படுத்திப் பச்சைப்பொய்களைப் பரப்பி வருகிறது.

விரிவான விளக்கம்
நேற்று (21/01/26) அன்று இந்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் சபாநாயகர் அப்பாவு உரை வாசிக்கும் போது மின்துறை பற்றி குறிப்பிட்டு பேசிய சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 5 ஆண்டுகளில் ஒரு யூனிட் அளவில் கூட புதிதாக மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவே இல்லை’ என்று பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கூடப் புதிதாக உற்பத்தி செய்ய இயலாத திமுக அரசு,
ஆளுநர் உரையைப் பயன்படுத்திப் பச்சைப்பொய்களைப் பரப்பி வருகிறது. pic.twitter.com/MbliIRlbs2
உண்மை என்ன?
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். ‘DT Next’ ஆங்கில செய்தித்தளத்தில் வெளியான ஒரு செய்தியை காணமுடிந்தது.

அதில், ‘கடந்த 2021 ஆம் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் (Total Installed Generation Capacity), 2024 ஆம் ஆண்டு மே மாதம் 36,671 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2021 ஆண்டு முதல் 10,779 MVA திறன் கொண்ட 54 Substations புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று TANGEDCO-வின் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் (Thermal Power Stations) மூலம் 2020-21 நிதியாண்டில் 15,554 MU-ஆக இருந்த மின் உற்பத்தி, 2021-22ல் இது 20,391 MU-ஆகவும், 2022-23ல் 22,689 MU-ஆகவும் மற்றும் 2023-24ல் 25,479 MU-ஆகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

‘The Times of India’ வெளியிட்டுள்ள செய்தியின் படி, சென்னை எண்ணூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய அனல் மின் நிலையம் கட்டப்பட்டு வருவதாகவும், அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மற்றொரு புதிய அனல் மின் நிலையம் கட்டப்பட்டு வருவதாகவும், இவை இரண்டும் 2026 மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரியவருகிறது. இந்த இரண்டு அனல் மின் நிலையங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு புதிதாக 2640 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு அரசு முன்னெடுப்புகள் செய்துள்ளது அறியமுடிகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சூர்ய ஆற்றல் மூலம் 10,000 மெகாவாட் மின்சாரமும் காற்றாலை மூலமாக 2000 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய மின்சார உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று அப்பட்டமான பொய்யை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.