யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதி விடுதிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையும், ஒரு நாள் இறைச்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
அரசு விடுதி மாணவர்களுக்கு இனி Non Veg கட்டாயம் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு !
#CMVijay #TNAssembly #HostelFood #NonVeg

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கணிசமான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள். அவர்களுக்காக ஆதி திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் மட்டன், ஒரு நாள் சிக்கன், 5 நாட்கள் முட்டை வழங்கவேண்டும் என்று முதல்வர் விஜய் புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தவெக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அரசு விடுதி மாணவர்களுக்கு இனி Non Veg கட்டாயம் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு ! #CMVijay #TNAssembly #HostelFood #NonVeg pic.twitter.com/UVMBA53Yk7
உண்மை என்ன?
அரசு பள்ளி விடுதிகளில் முட்டை, இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்படுவது குறித்த தகவல்களைத் தேடினோம். ‘பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை’யின் சார்பாக 2024-25ஆம் நிதியாண்டில் வெளியிடப்பட்டிருந்த ஆவணம் ஒன்றைக் காணமுடிந்தது.

அதன்படி, ’பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 2022 மார்ச் மாதம் ஒரு அரச்சாணையையும், 2023 அக்டோபர் மாதம் மற்றொரு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது’ தெரிவருவருகிறது. அந்த அரசாணைகளின் படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக நடந்தப்படும் சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை என மாதத்திற்கு 20 நாட்கள் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாரத்திற்கு ஒரு நாள் புதன்கிழமையன்று கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதிலிருந்து, 2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதி விடுதிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையும், ஒரு நாள் இறைச்சியும் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது.
முடிவு:
சமூகநீதி விடுதிகளில் முட்டை, இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்படுவது கடந்த மூன்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது என்பதை மறைத்து, தவெக அரசால் இந்த திட்டம் புதிதாக அறிவிக்கப்பட்டது போல் தவறான தகவலை பரப்புகிறார்கள்.