யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வேங்கைவயல் வழக்கு குறித்து ஒரு அறிக்கை கூட திருமாவளவன் வெளியிடவில்லை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
வேங்கைவயல் விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் ஒரு துண்டு அறிக்கை கூட வெளியிடவில்லை. - பாஜகவைச் சேர்ந்த சாமுவேல்.
விரிவான விளக்கம்
‘இளைய பாரதம்’ என்ற பாஜக ஆதரவு யூட்யூப் தளத்தில் பேட்டியளித்த பாஜகவைச் சேர்ந்த சாமுவேல் என்பவர், ‘வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக இல்லையென்றாலும் டிவிட்டர் அல்லது கடிதம் வழியாகயேனும் ஒரு துண்டு அறிக்கையாவது அறிந்தாரா? அளிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மை என்ன?
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து இணையத்தில் தேடினோம். அதில் கிடைத்தவற்றை கால வரிசைப்படி கீழே கொடுக்கின்றோம்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் 2023 ஜனவரி 8ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக சார்பில் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக் கழிவைக் கொட்டிய இழிசெயலைக் கண்டித்தும் இத்தகைய இழிவான குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
#சனவரி_11 அன்று தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக சார்பில் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக் கழிவைக் கொட்டிய இழிசெயலைக் கண்டித்து #ஆர்ப்பாட்டம்.
இழிவினும் இழிவான குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி நடைபெறுகிறது.#VCK pic.twitter.com/5ZMBi6cPnj
இதனைத் தொடர்ந்து 2023 பிப்ரவரி மாதம் வேங்கைவயல் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் விசிக சார்பில் நடத்தப்பட்டது. அதனை தொடங்கி வைத்து பேசிய திருமாவளவன், ‘ வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட பின்னரும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது’ என்று பேசியிருக்கிறார்.
கடந்த 2025 ஜனவரி மாதம் வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி சார்பாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் குற்றவாளிகள் என கூறப்பட்டிருந்தது. இவ்வாறு பட்டியல் சமூக இளைஞர்களையே குற்றவாளிகளாக குறிப்பிடும் அந்த குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்தார் திருமாவளவன்.
வேங்கைவயல் வழக்கு:
----------------
காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது!
இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
----------------------
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல்… pic.twitter.com/2VGWFGOvDY
இவ்வாறு வேங்கைவயல் வழக்கு தொடர்பாக அனைத்து நிலைகளிலும் விசிக தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாடுகளை அறிக்கைகளாக வெளியிட்டுள்ளார் என்பதைக் காண்கிறோம்.
முடிவு:
வேங்கைவயல் வழக்கு குறித்து ஒரு துண்டு அறிக்கை கூட திருமாவளவன் வெளியிடவில்லை என்று தவறான தகவலை பாஜகவைச் சேர்ந்த சாமுவேல் பரப்பிக்கொண்டிருக்கிறார்.