யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1954 மே மாதம் 18ஆம் தேதியன்று காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அரசாங்கம் ‘குலக்கல்வி திட்டத்தை’ கைவிடுவதாக அறிவித்தது.
பரவிய செய்தி
“ராஜாஜி கொண்டுவந்த ’குலக்கல்வி திட்டத்தை’ எதிர்ப்பு காரணமாக ஓரிரு மாதங்களில் அவர் முதலமைச்சராக இருந்தபோதே திரும்ப பெற்றுவிட்டார்” - சரவணபிரசாத் பாலசுப்ரமணியன்.

விரிவான விளக்கம்
தமிழ்நாடு வரலாற்றில் ‘குலக்கல்வி’ திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிக முக்கியமானது. ராஜாஜி முதல்வராக இருந்த போது ‘Modified Scheme of Elementary Education’ என்ற கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பாதி நாள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். மீதிநாள் அந்த குழந்தைகள் தங்களது தந்தையர் செய்துவரும் தொழிலை பழகவேண்டும். இது சாதி அடிப்படையிலான தொழில் என்ற ’வர்ணாசிரம’ கருத்தை பள்ளிக்கல்வியில் கொண்டு வருவதாகவே இருக்கும் என்று கூறி பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இத்திட்டத்திற்கு எதிராக போராடிய பெரியார் இதனை ‘குலக்கல்வி திட்டம்’ என்று அழைத்தார்.
இந்நிலையில், சரவணபிரசாத் பாலசுப்ரமணியன் என்ற மோடி ஆதரவாளர், ’ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் கொண்டுவந்த ’குலக்கல்வி திட்டத்தை’ எதிர்ப்பு காரணமாக ஓரிரு மாதங்களில் அவர் முதலமைச்சராக இருந்தபோதே திரும்ப பெற்றுவிட்டார். ஆனால் காமராஜர் ’குலக்கல்வி திட்டத்தை’ ரத்து செய்ததாக திராவிட இயக்கத்தினர் பொய்யை பரப்புகிறார்கள்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
குலக்கல்வி திட்டம் குறித்த குற்றச் சாட்டே ஒரு திட்டமிட்ட உருட்டு...
பள்ளிகள் எண்ணிக்கை குறைந்ததால் இரண்டு ஷிப்ட் கொண்டு வந்தார் ராஜாஜி.
மதியத்துக்கு மேல் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டதற்கு ஏதாவது ஒரு தொழில் பயிலலாம் அல்லது தந்தைக்கு உதவியாக இருக்கலாம் என்று சொன்னதை… pic.twitter.com/B2eRZR2lgh
உண்மை என்ன?
’குலக்கல்வி’ திட்டம் கைவிடப்பட்டது குறித்து தகவல்களை தேடினோம். அப்போது, 1954 மே 18 அன்று சட்டமன்றத்தில் நடந்த கேள்வி பதில் விவாதங்கள் பற்றிய அதிகாரபூர்வ ஆவணத்தை கண்டோம்.
அன்றைய சட்டமன்றத்தில் பேசிய கல்வி அமைச்சர் C. சும்பிரமணியம் , ’இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான சம்மதத்தையும் ஒத்துழைப்பையும் பொதுமக்களிடமிருந்து பெறமுடியவில்லை. அதனால், இதனை கருத்து கொண்டு ‘Modified Scheme of Elementary Education’-ஐ (அதவாது குலக்கல்வி திட்டத்தை) அரசாங்கம் கைவிடுவதாக’ அறிவித்தார்.

அதேபோல் 1952 முதல் 1957 வரையில் சட்டமன்றத்தில் நடந்தவைகள் பற்றி குறிப்பிடும் ஆவணத்தில் இதுபற்றி இருப்பதைக் கண்டோம். அதன்படி, 1953 ஜூலை 15 அன்று ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது ’குலக்கல்வி திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 29ஆம் தேதியன்று இந்த திட்டத்தை கைவிடக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் கூட ஆதரவாக வாக்களித்தனர். அதாவது காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த தீர்மானத்தை எதிர்த்து 138 வாக்குகளும் ஆதரித்து 138 வாக்குகளும் சமமாக இருந்தன. சபாநாயகர் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். இதனால் தீர்மானம் தோற்றுப்போனது. பின்னர், இந்த திட்டம் நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ராஜாஜி முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்த திட்டம் கைவிடப்படவில்லை.
காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், 1954 மே மாதம் 18ஆம் தேதியன்று அப்போதைய கல்வி அமைச்சர் C. சும்பிரமணியம் ‘குலக்கல்வி திட்டத்தை’ அரசாங்கம் கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது தான் ‘குலக்கல்வி திட்டத்தை’ அரசாங்கம் திரும்பப் பெற்றது, ராஜாஜி தானே இந்த திட்டத்தை கைவிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
ராஜாஜி கொண்டு வந்த ’குலக்கல்வி திட்டத்தை’ ஓரிரு மாதங்களில் அவர் முதலமைச்சராக இருந்தபோதே திரும்ப பெற்றுவிட்டார் என்று மோடி ஆதரவாளரான சரவணபிரசாத் பாலசுப்ரமணியன் தவறான தகவலை பரப்பி வருகிறார்.