யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் அண்ணா மறைவிற்கு பிறகு முதல்வராக உயரும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவராக இருந்தார் கருணாநிதி.
பரவிய செய்தி
அறிஞர் அண்ணாவின் அருகில் நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் எம்ஜிஆர் தான் ஆனால் திரைப்படத்தில் யாரு பக்கத்தில் உள்ளது போல காட்டியுள்ளனர் ??


விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் 1965ஆம் ஆண்டு நடந்து மொழிப் போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. அப்படத்தின் இறுதியில், அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்று சட்டமன்றத்தில் உரையாற்றும் போது அருகில் கருணாநிதி இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்ணாதுரை சட்டமன்றத்தில் உரையாற்றும் உண்மையான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘அவருக்கு அருகில் நெடுஞ்செழியனும், எம்.ஜி.ஆர்-ம் தான் இருக்கிறார்கள். நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் ஆகியோர் அளவிற்கு கருணாநிதி முக்கியமானவராக இருக்கவில்லை. இந்த உண்மையை திரித்து திரைப்படத்தில் தவறாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள்’ என்று சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன?
உண்மையில் பரப்பப்படும் புகைப்படத்தில் அண்ணாதுரைக்கு அருகில் நெடுஞ்செழியனும் கருணாநிதியும் தான் அமர்ந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இரண்டாம் வரிசையில் தான் அமர்ந்திருக்கிறார்.
மேலும், 1967 தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது, அமைச்சரவையில் எம்.ஜி.ஆர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1967ல் சட்டமன்ற உறுப்பினராக (MLA) மட்டுமே இருந்தார் எம்.ஜி.ஆர். 1971ல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே 1971 ஜூலையில், திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் திமுக முதன்முதலில் ஆட்சி வந்த 1967ஆம் ஆண்டிலிருந்து அண்ணா மறைவு வரை (1969) நெடுஞ்செழியன் கல்வித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.

அண்ணாதுரை மறைவிற்கு பிறகு நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக சில காலம் இருந்தார். அதன் பின்னர் 1969ல் கருணாநிதி நிரந்தர முதல்வராக பொறுப்பேற்றார்.
மேலும், 1967ஆம் ஆண்டில் அண்ணாதுரை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கூட அண்ணாதுரை அருகில் கருணாநிதி அமர்ந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காணமுடிகிறது.

இதிலிருந்து, கருணாநிதி அண்ணாதுரையின் அமைச்சரவையில் முக்கியமானராகவும், அண்ணாதுரை அருகில் அமர்ந்திருக்கும் அளவிற்கு செல்வாக்கும் பெற்றிருந்தார் என்பது தெரிகிறது.
முடிவு:
‘பராசக்தி’ திரைப்படத்தில் காட்சிபடுத்தியது போல் அண்ணாதுரை அமைச்சரவையில் கருணாநிதி முக்கியமானவராக இருக்கவில்லை என்ற தவறாக கருத்தை சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.