யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
NCRB-ன் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி இந்தியாவிலே உத்தர பிரதேசத்தில் தான் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பல மடங்கு அதிகமாக நடக்கிறது.
பரவிய செய்தி
”தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியாவிலே தலித் மக்கள் அதிகமாக இன்னலுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாக பட்டியல் சமூக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்”
விரிவான விளக்கம்
இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த ஜெயப்பிரகாஷ் என்பவர், ”தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியாவிலே தலித் மக்கள் அதிகமாக இன்னலுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாக பட்டியல் சமூக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறுகிறார்.
உண்மை என்ன?
‘NCRB’ ஒவ்வொரு ஆண்டும் மாநில வாரியாகவும் பல்வேறு குற்றப்பிரிவுகளின் அடிப்படையிலும் இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் குறித்த தரவுகளை தொகுத்து ‘Crime in India’ என்று ஆவணமாக வெளியிடும். அவ்வாறு ‘NCRB’ கடைசியாக வெளியிட்டுள்ளது ‘Crime in India - 2023’ ஆவணம் தான்.
அந்த ஆவணத்தின் இரண்டாவது தொகுதியில், 2021 முதல் 2023 வரையிலான மூன்றாண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மாநிலவாரியான தரவுகளை காணமுடிகிறது.

அதில் 2023ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் மக்களுக்கு எதிராக 15130 குற்றங்கள் பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவிலே அதிக எண்ணிக்கையாகும். அடுத்ததாக, 8232 குற்றங்களுடன் மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தலித் மக்களுக்கு எதிராக 1921 குற்றங்கள் பதிவாகி தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.
இதிலிருந்து உத்தர பிரதேச மாநிலத்தில் தான் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல மடங்கு அதிகமாக நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
NCRB தரவுகளின் படி இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கிறது என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது.