யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெகவில் இணைந்த மயூரி கண்ணன் காமராஜரின் நேரடி வாரிசும் அல்ல. மகளும் அல்ல. குடும்ப உறவு முறைப்படி அவர் காமராஜருக்கு பேத்தி ஆவார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் வேறு கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், நீக்கப்பட்டவர்கள் சேர்வது தொடர்ந்து நடந்து வருகிறது. விசிக-வில் இருந்து விலகிய அதன் அர்ஜுனா, அதிமுக-விலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் ‘தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான காமராஜரின் மகள் மயூரி தவெகவில் இணைந்ததாக’ சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
Former Chief Minister Kamarajar's daughter Mayuri has joined TVK @TVKVijayHQ pic.twitter.com/wsgMm7bNUl
உண்மை என்ன?
இது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ‘DT Next’ வெளியிட்டுள்ள செய்தியின் படி ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான காமராஜரின் ‘பேத்தி’ மயூரி தவெகவில் இணைந்ததாக தெரிய வருகிறது.

இந்த மயூரி என்பவர் குறித்து மேலும் தேடியதில், ’ABP தமிழ்நாடு’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அச்செய்தியில், பெருந்தலைவர் காமராஜரின் உடன் பிறந்த சகோதரியான நாகம்மாளின் பேரனான காமராஜ் (62) மயூரி கண்ணன் குறித்து கூறிய கருத்து என்னவென்றால், ”காமராஜரின் தந்தையான குமாரசாமியை அவரின் சிறு வயதில் வாரிசு இல்லாத ஒரு குடும்பம் தத்தெடுத்து வளர்த்து வந்தது. இவ்வாறு காமராஜின் தந்தையை தத்தெடுத்து வளர்த்தவருக்கு அண்ணாமலை என்ற சகோதரர் இருந்தார். இந்த அண்ணாமலையின் மகள் சந்திராவிற்கு பிறந்தவர் தான் மயூரி கண்ணன்” என்பது தான். மேலும், ’நேரடி வாரிசு அல்லாத அந்த பெண் எப்படி தன்னை காமராஜரின் பேத்தி என உரிமை கொண்டாட முடியும்’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடக்கத்தில் பாஜகவில் இருந்த இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்தார். தற்போது திமுகவிலிருந்து விலகி தவெகவில் சேர்த்திருக்கிறார்.
இதிலிருந்து, தவெகவில் இணைந்த மயூரி கண்ணன் காமராஜரின் நேரடி வாரிசும் அல்ல. மகள் முறையும் அல்ல. அவர் காமராஜருக்கு குடும்ப உறவு முறைப்படி பேத்தி என்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
முடிவு:
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் குடும்ப உறவு முறை பேத்தியான மயூரி என்பவரை காமராஜரின் மகள் என்று தவறாக பரப்பி வருகிறார்கள்.
