யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ கொல்கத்தா நகரத்தில் உள்ள பாலிகங்கே என்ற பகுதியில் வெள்ளம் வந்துபோது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
4000 ஆயிரம் கோடி பேக்கேஜ்.. சென்னையில் வீட்டில் அருகே குளம் அமைத்து குடுத்த திமுக அரசு..
விரிவான விளக்கம்
இலங்கையில் கன மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தி பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் விளைவித்த ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழையை பெய்ந்து வருகிறது. சென்னையில் மழை நீர் சரியாக வடியாமல் சாலையில் தேங்கி நிற்பதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகரத்தின் தெருக்களில் முட்டி அளவு வெள்ள நீர் போகும் வீடியோ காட்சியை பதிவிட்டு, ‘இந்த வீடியோ சென்னையில் தற்போது எடுக்கப்பட்டது என்றும் 4000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்வதாக கூறி திமுக அரசு ஏமாற்றி விட்டது’ என்றும் அதிமுக ஆதரவாளர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் key frame-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Kais Kalim’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பதிவில், ‘Kolkata 7 point circus’ என்று எழுதியிருப்பதை காணமுடிந்தது.
மேலும் அந்த வீடியோவில் Royal Indian Restaurant, Golden Meat Shop போன்ற கடைகளின் பெயர்ப் பலகைகளை காணமுடிகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு கொல்கத்தா நகரத்தில் ‘Google Map’ செயலி மூலம் தேடினோம். கொல்கத்தா நகரத்தில் பாலிகங்கே என்ற பகுதியில் மேற்கூறிய கடைகள் இருப்பதைக் காணமுடிந்தது.
இதிலிருந்து இந்த வீடியோ கொல்கத்தாவில் வெள்ளம் வந்துபோது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரிந்தாலும், இது எந்த ஆண்டு வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வ செய்திகளின் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மேக வெடிப்பு காரணமாக கொல்கத்தாவில் வெள்ளம் ஏற்பட்டது என்பதை செய்திகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த வீடியோவும் செப்டம்பர் 25ஆம் தேதி பேஸ்புக் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ கொல்கத்தாவில் வெள்ளம் வந்துபோது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கொல்கத்தாவில் வெள்ளம் வந்துபோது எடுக்கப்பட்ட வீடியோ கொண்டு, டிட்வா புயல் காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதாக அதிமுக ஆதரவாளர்கள் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.