யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெங்காயத்தில் கருப்பு ஏற்படக் காரணமாக பூஞ்சையும், மியூகோர்மைகோசிஸ் நோய் தொற்றுக்கு காரணமான பூஞ்சையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை. இரண்டும் ஒன்றல்ல!
பரவிய செய்தி
’கருப்பு படலம் படிந்திருக்கும் வெங்காயத்தை சாப்பிட்டால் மியூகோர்மைகோசிஸ் நோய் தொற்று ஏற்படும்’


விரிவான விளக்கம்
வெங்காயத்தின் மேற்புறத்தில் கருப்பு படலம் படிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ’வெங்காயத்தில் இவ்வாறு கருப்பு படலம் ஏற்படக் காரணமான பூஞ்சையால் ’மியூகோர்மைகோசிஸ்’ என்ற நோய் தொற்று ஏற்படக்கூடும். இந்த வெங்காயத்தை உட்கொள்வதால் குமட்டல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முதலில், வெங்காயத்தில் கருப்பு படலம் ஏற்படுவதற்கு காரணமான பூஞ்சை பற்றி தேடினோம். ‘The Times of India’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியின் படி, இந்த கருப்பு படலம், ‘Aspergillus Niger’ என்ற பூஞ்சையால் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ‘Aspergillus Niger’ பூஞ்சை குறித்து தேடியபோது, இது சுற்றுச்சூழலில் பரவலாக வளரக்கூடியது. மண், உணவுப் பொருட்கள், துணி, உதிர்ந்து மக்கும் இலைகள் ஆகியவற்றில் பொதுவாக வளரக்கூடியது. இந்த பூஞ்சையால் ஒவ்வாமை (allergies), ஆஸ்துமா மற்றும் சைனசிடிஸ் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால், ’மியூகோர்மைகோசிஸ்’ என்ற நோய் இந்த குறிப்பிட்ட பூஞ்சையால் ஏற்படுவதாக எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை.

‘Black Fungus’ என்று சொல்லப்படக்கூடிய ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் தொற்று குறித்து தேடியபோது, இந்த தொற்று ’Mucormycete’ என்ற வகையை சேர்ந்த பூஞ்சையால் ஏற்படுவதாக தெரியவருகிறது. இந்த பூஞ்சை மண், அழுகும் தாவரங்கள் ஆகியவற்றில் பொதுவாக காணப்படுகிறது. காற்றிலும் மண்ணிலும், ஆரோக்கியமான மக்களின் மூக்கு சளியிலும் கூட இந்த பூஞ்சை இருக்கின்றது.

மக்கள் அணுதினமும் இந்த பூஞ்சைக்கு ஆட்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் நோய் தொற்று ஏற்படுவதில்லை. பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள், நோய்க்கு தீவிரமான மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது, அவர்களது ‘நோய் எதிர்ப்பு சக்தி’ குறைந்து போகும் அந்த வேளையில்தான் இந்த பூஞ்சையால் ’மியூகோர்மைகோசிஸ்’ நோய் தொற்று ஏற்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும், இந்த ‘மியூகோர்மைகோசிஸ்’ தீவிரமான நோயாக இருந்தாலும் இது அரிதாக தொற்றக்கூடிய நோயாகும். மனிதர்களில் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு இது பரவாது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, வெங்காயத்தில் கருப்பு படலம் ஏற்படக் காரணமாக பூஞ்சையும், மியூகோர்மைகோசிஸ் நோய் தொற்றுக்கு காரணமான பூஞ்சையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை என்பது தெளிவாகிறது. மேலும், மியூகோர்மைகோசிஸ் எல்லோரையும் பொதுவாக பாதிக்கக்கூடிய நோய் அல்ல. அது அரிதான நோய் தொற்றாகும்.
இருப்பினும் வெங்காயம் போன்ற காய்கறிகளில் கருப்பு பூஞ்சை படலம் இருந்தால், அதனை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்துவிட்டு உண்ண வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
முடிவு:
வெங்காயத்தில் காணப்படும் கருப்பு படலத்திற்கு காரணமான பூஞ்சையால் ’மியூகோர்மைகோசிஸ்’ நோய் தொற்று ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.