யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உபரி வருவாய்-க்கும் (revenue surplus) வருவாய்-க்கும் (revenue) வித்தியாசம் தெரியாமல் ’தமிழ் ஜனம்’ தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டிய 5 மாநிலங்கள்
#india #indianeconomy #statepercapitalincome #TamilJanam

விரிவான விளக்கம்
செப்டம்பர் 24ஆம் தேதியன்று ’தமிழ் ஜனம்’ ஊடகத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வரைபடம் ஒன்றை பதிவிட்டு, அதில் இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாகவும்; தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறை கொண்ட மாநிலங்களாக இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் வருவாய் விஷயத்தில் முன்னிலையில் இருக்கிறதா? என்று இணையத்தில் தேடிய போது, ’THE ECONOMIC TIMES’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. செப்டம்பர் 22 அன்று வெளியாகியுள்ள அந்த செய்தியில், ’கடந்த 2022 - 2023 நிதியாண்டில் எந்தெந்த மாநிலங்கள் உபரி வருவாய் (revenue surplus) வைத்திருந்தது, எந்தெந்த மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை (revenue deficit) வைத்திருந்தது என்ற தரவுகளை தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) வெளியிட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்கள் 2022 - 2023 நிதியாண்டில் அதிக உபரி வருவாய் வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உத்தர பிரதேசம் 37,000 கோடி உபரி வருவாய் வைத்து முதலிடத்திலும், 19,865 கோடி உபரி வருவாய் வைத்து குஜராத் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 43,488 கோடி வருவாய் பற்றாக்குறையுடன் ஆந்திரா முதலிடத்திலும் 36,215 கோடி வருவாய் பற்றாக்குறையுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உபரி வருவாய், வருவாய் பற்றாக்குறை என்று தான் உள்ளது. மாநிலங்கள் உற்பத்தி மற்றும் சேவை மூலமாக ஈட்டிய வருவாயை பற்றி இங்கே குறிப்பிடப்படவில்லை. உபரி வருவாய் (revenue surplus) என்பது ஒரு அரசு தனக்கு கிடைத்த வருவாயை விட குறைவாக செலவு செய்திருக்கிறது என்று பொருள். அதேபோல், வருவாய் பற்றாக்குறை (revenue deficit) என்பது, ஒரு அரசு தனக்கு கிடைக்கும் வருவாயை விட அதிகம் செலவு செய்திருக்கிறது என்று பொருள். இது இந்த அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிகமாக செலவு செய்திருப்பதைக் காட்டுகிறது.

மேலும் தேடியதில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வாரியாக கணக்கிடும் போது, மகாராஷ்ட்ராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து பார்க்கும் போது, உபரி வருவாய்-க்கும் (revenue surplus) வருவாய்-க்கும் (revenue) வித்தியாசம் தெரியாமல் ’தமிழ் ஜனம்’ தவறான செய்தியை வெளியிட்டுள்ளது தெரிகிறது.
முடிவு:
உபரி வருவாயை ’வருவாய்’ என்றும், வருவாய் பற்றாக்குறையை ’நிதிப்பற்றாக்குறை’ என்றும் குழப்பிக்கொண்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ளது ’தமிழ் ஜனம்’.