யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் இந்துகள் முஸ்லிம்களைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட 15 மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்துகள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
பரவிய செய்தி
இந்தியாவில் மொத்தம் 766 மாவட்டங்கள் உள்ளன. அதில் 200 மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக்கப்பட்டுள்ளனர். இப்ப புரியுதா இங்கே என்ன நடக்குதுன்னு?

WhatsApp Forward
விரிவான விளக்கம்
’இந்தியாவில் உள்ள 200 மாவட்டங்களில் இந்துகள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர்’ என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட செய்தியை பகிர்ந்து, ’இந்தியாவில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தான் இந்துகள் இவ்வாறு சிறுபான்மை ஆக்கப்படுகின்றனர்’ என்று வாட்ஸ் ஆப்-ல் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன:
இந்தியாவில் மதவாரியான மக்கள்தொகை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து தேடுகையில், ‘Pew Research Center’ என்ற தளத்தில் 2021 செப்டம்பர் மாதம் வெளியான கட்டுரையைக் காணமுடிந்தது. 1951 முதல் 2011 வரையிலான 60 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள்த்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
அதன்படி, 1951ஆம் ஆண்டில் 30.4 கோடியாக இருந்த இந்துகள் எண்ணிக்கை 2011ல் 96.6 கோடியாக அதிகரித்திருக்கிறது. 3.5 கோடியாக இருந்த முஸ்லிம் எண்ணிக்கை 17.2 கோடியாக இருக்கிறது. 80 லட்சமாக இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை தற்போது 2.8 கோடியாக இருக்கிறது.

இதில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி (கருவுறும் விகிதம்) தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்திருப்பதை போலவே, இந்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மதப் பிரிவினரின் கருவுறும் விகிதமும் குறைந்தே வந்திருப்பது தெரியவருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம் மதப் பிரிவினரின் பங்கு வெறும் 4 புள்ளிகள் அதிகரித்திருக்கிறது. அதேபோல், இந்து மதப் பிரிவினரின் பங்கு வெறும் நான்கு புள்ளிகள் மட்டுமே குறைந்திருக்கிறது.

மேலும் இந்த கட்டுரையில், இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களில் 28 மாநிலங்களில் இந்துகள்தான் பெரும்பான்மையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம் (20 கோடி மக்கள்தொகை), மகாராஷ்ட்ரா (11.2 கோடி), பீகார் (10.4 கோடி) போன்ற அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்களில் இந்துகள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

ஒரு லட்சத்திற்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள லட்சத்தீவின் சிறிய மேற்கு தீவுக்கூட்டத்திலும், ஒரு கோடியே 30 லட்சம் மக்கள்தொகை உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிலும் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்த முஸ்லிம் பெரும்பான்மையான பகுதிகளில் வெறும் 5% முஸ்லிம்கள் தான் உள்ளனர். மீதமுள்ள 95% முஸ்லிம்கள் இந்துகள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் தான் வாழ்கிறார்கள். பஞ்சாபில் சீக்கியர்களும், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

மேலும் ’தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இந்தியாவில் 15 மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்துகள் பெரும்பான்மையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தியாவில் குறிப்பாக கேரளா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு அதிக அளவில் முஸ்லிம் குழந்தைகள் பிறப்பதாக பொய்யான தகவல்களை ஏற்கனவே பரப்பிவந்திருக்கிறார்கள். இதனை நமது ’You Turn’ தளத்தில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளோம்.
இதிலிருந்து கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் (2011) படி, இந்தியாவில் 79.8% இந்துகளும், 14.2 % முஸ்லிம்களும் உள்ளது தெரியவருகிறது. இந்துகள் முஸ்லிம்களைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதும், குறிப்பிட்ட 15 மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்துகள் பெரும்பான்மையாக இருப்பதும் இவற்றிலிருந்து தெரியவருகிறது.
முடிவு:
இந்தியாவில் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக்கப்பட்டுள்ளனர் என்றும் தவறான தகவலை மத வெறுப்பு கண்ணோட்டத்துடன் பரப்பிவருகின்றனர்.