யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2017-18 நிதியாண்டு தொடங்கி தற்போது வரை ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு நிலையாக நான்காம் இடத்தில்தான் இருக்கிறது.
பரவிய செய்தி
தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா என சிறந்து விளங்கிய தமிழகத்தை இன்று ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு தள்ளியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இன்னும் சில வருடங்களில் ஹரியானா, உத்தர் பிரதேசம் போன்ற மாநிலங்கள் நம்மிடம் முந்தி செல்லும் இடத்தில் உள்ளது.

விரிவான விளக்கம்
GST என்று அழைக்கப்படும் 'சரக்கு மற்றும் சேவை வரி’ கடந்த 2017ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்திற்கான மாநில வாரியான ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, ’தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய தமிழகம் தற்போது ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது இடத்திலிருந்து நான்காம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டிருக்கிறது. இப்படி ஜிஎஸ்டி வருவாயில் தமிழகத்தை பின் தள்ளியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை’ என்று பாஜகவைச் சேர்ந்தவர் பரப்பிவருகிறார்.
உண்மை என்ன?
2017ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததிலிருந்து, ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு எந்த ஆண்டில் இரண்டாம் இடத்திலிருந்தது என்பதைக் கண்டறிய, ஜிஎஸ்டி வரிக்கென ஒன்றிய அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விவரங்களைத் தேடினோம்.
இந்த வலைத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டிற்கும் மாநில வாரியாக ஜிஎஸ்டி வருவாய் பற்றிய விவரங்கள் இருப்பதைக் கண்டோம். அதில் 2017-18 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை மாநில வாரியான ஜிஎஸ்டி வருவாய் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் 2024-25 நிதியாண்டில் 2024 டிசம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டி வருவாய் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. 2025ஆம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்ட மாதாந்திர (Monthly) ஜிஎஸ்டி வருவாய் பற்றிய விவரங்களிலிருந்து எடுத்தோம்.

சேகரிக்கப்பட்ட இந்த விவரங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்கையில், 2017-18 நிதியாண்டு தொடங்கி தற்போது வரை தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாயில் நான்காம் இடத்தில்தான் இருக்கிறது என்பதைக் காண்கிறோம். முதல் மூன்று இடங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது.
ஜிஎஸ்டி என்பது பல்வேறு மறைமுக வரிகளை உள்ளடங்கிய ’ஒற்றை மறைமுக வரியாகும்’. மேலும், இது நுகர்வு அடிப்படையிலான வரியாகும் (consumption based tax). உதாரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாகன உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட கார் ஒன்று கேரளாவில் விற்கப்பட்டால், அந்த வரி கேரளா மாநிலத்திற்குத்தான் செல்லும். இதனால், ஜிஎஸ்டி வருவாயை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் நுகர்வைத் தரவரிசைப்படுத்த முடியும். ஆனால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தரவரிசைப்படுத்த முடியாது.

மேலும், தமிழ்நாடு மாநிலம் எந்த பொருளாதார அம்சத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று தேடியதில் ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)’-ல் இரண்டாம் இடத்தில் இருப்பது தெரியவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு, ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)’-யையும் ஜிஎஸ்டி வரி வருவாயையும் குழப்பிக்கொண்டு, தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு பின்னடைந்துவிட்டதாக பரப்புகிறார்கள்.
முடிவு:
2017-18 நிதியாண்டு தொடங்கி தற்போது வரை ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு நான்காம் இடத்தில்தான் இருக்கிறது. ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)’-யையும் ஜிஎஸ்டி வரி வருவாயையும் குழப்பிக்கொண்டு, தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு பின்னடைந்துவிட்டதாகவும் அதற்குக் காரணம் திமுக ஆட்சிதான் என்றும் பாஜகவினரால் திரித்துப் பரப்பப்படுகிறது.