YouTurn

சேலம் MP திமுகவில் இருந்து விலகியதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

சேலம் MP திமுகவில் இருந்து விலகியதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுகவிலிருந்து விலகியவர் சேலம் மத்திய மாவட்டத்தில் ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்தவராவார். அவரது பெயருக்கு முன்னாள் ’MP’ என்று குறிப்பிடப்படுவது ’Initial’ மட்டுமே. அவர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை.

பரவிய செய்தி

சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.! பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை இதற்கு நாங்கள் தயாராக இல்லை..! செருப்படி..


X Link / Archive Link

விரிவான விளக்கம்

எழில்அரசன் என்பவர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியிட்ட விலகல் கடிதத்தைப் பதிவிட்டு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) திமுகவிலிருந்து விலகிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் பரப்பிவருகின்றனர்.

https://x.com/i/web/status/1886801724037550355

உண்மை என்ன?


பரப்பப்படும் தகவலை அடிப்படையாகக் கொண்டு தேடியதில் ‘எக்ஸ்’ தளத்தில் ‘சேலம் MP.எழில்அரசன்’ என்ற பெயருடைய ஒரு கணக்கை (Account) காணமுடிந்தது. இந்த ’எக்ஸ்’ கணக்கின் பதிவுகளில் தேடியதில், பரப்பப்படும் விலகல் கடிதத்துடன் கூடிய பதிவைக் காணமுடிந்தது.

image.png

அதில், 'கடந்த 01.09.2024 அன்று நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு காரணங்களால் எங்களைக் கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று திமுகவின் மத்திய சேலம் மாவட்டச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் R.ராஜேந்திரன் அவர்களிடம் தெரிவித்ததாக’ பதிவிடப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் விலகல் கடிதத்தின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. 


அந்த கடிதத்தின் படி, ‘திமுகவின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போது ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்த சேலம் MP.எழில்அரசன் ஆகிய நான் 04.02.2025 அன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png

அதற்கான காரணமாக, ’திமுகவில் தலித் மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாகவும்’ கூறப்பட்டிருந்தது. 


இதுகுறித்து மேலும் தேடிய போது, ’asianet news தமிழ்’  செய்தித்தளத்தில் வெளியான செய்தியைக் காணமுடிந்தது. அதிலும், ‘சேலம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல் பட்டு வந்த எழில்அரசன்’ என்றும் ’திமுக நிர்வாகி’ என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


மேலும் தேடுகையில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் (Member of Parliament) திமுகவைச் சேர்ந்த T.M.செல்வகணபதி என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து உறுதியாகிறது.

image.png

இதிலிருந்து இந்த விலகல் கடிதம் கொடுத்த எழில்அரசன் என்பவர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவர் சேலம் மத்திய மாவட்டத்தில்  ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்தவர் என்பதும் அவரது பெயருக்கு முன்னாள் ’MP’ என்று குறிப்பிடப்படுவது அவரது ’Initial’ என்பதும்  உறுதியாகிறது.


முடிவு:


சேலம் மத்திய மாவட்டத்தில்  ஒன்றிய பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்த எழில்அரசன் என்பவர் திமுகவிலிருந்து விலகுவதாக வெளியிட்ட விலகல் கடிதத்தைத் திரித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாகத் நாம் தமிழர் கட்சியினர் தவறாக பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.