YouTurn

ஆதி திராவிடர் நலத்துறை நிதியை பெருமளவில் திருப்பி அனுப்புகிறதா திமுக அரசு? உண்மை என்ன?

ஆதி திராவிடர் நலத்துறை நிதியை பெருமளவில் திருப்பி அனுப்புகிறதா திமுக அரசு? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2022-23 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை மட்டுமே கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்ட இடைக்கால தரவுகளைக் கொண்டு தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

மொத்தம் 17945 கோடி ரூபாயை செலவிடவில்லை.
அதிமுக ஆட்சியில் 95%ரூ பணத்தை செலவழித்துள்ளார்கள்.
ஆனால் திமுக ஆட்சியில் ஏறக்குறைய 70% பணத்தை செலவழிக்கவில்லை..


image.png


Link / Archive Link 


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

மாநில அரசு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ’ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறைக்கு’ தனியாக நிதி ஒதுக்குவது நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு பொதுவாக அனைத்து கட்சிகளின் மீது வைக்கப்படுகிறது.


இந்நிலையில், கடந்த 2022-23 நிதியாண்டில்’ ஆதி திராவிடர் நலத்துறைக்கு’ ஒதுக்கிய மொத்த நிதியில் 63.65% நிதி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படுள்ளதாக ‘The NEWS Minute’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியை ஆதாரமாகக் கொண்டு ’உரிமைக்களம் TV’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் பரப்பப்படுகிறது. மேலும் கடந்த கடைசி ஏழு நிதியாண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாத தொகையில் இதுதான் அதிகபட்சம் என்றும், அதிமுக ஆட்சியில் பொதுவாக 95% நிதி செலவு செய்யப்பட்டுவிடும் ஆனால் திமுக ஆட்சியில் 60 சதவீதத்திற்கும் மேலான நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்று பரப்பப்படுகிறது.


இதனை பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ’நீலம் பண்பாட்டு மையம்’ இதனை நியூஸ் கார்ட் வடிவத்திலும் வெளியிட்டுவிட்டு, பின்னர் நீக்கிவிட்டது.  



உண்மை என்ன?


பரப்பப்படும் தகவலுக்கு ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள  ‘The NEWS Minute’ வெளியிட்ட அட்டவணை குறித்து இணையத்தில் தேடினோம். கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  ‘The NEWS Minute’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றில் இந்த அட்டவணை இருப்பதைக் காணமுடிந்தது. 



அதில், மதுரைச் சேர்ந்த கார்த்திக் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக பெற்ற தகவலின் அடிப்படையில் Scheduled Castes Sub Plan (SCSP) குறித்த இந்த தகவலை வெளியிட்டதாக  ‘The NEWS Minute’ குறிப்பிட்டுள்ளது. அதில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 16442 கோடியில் 5976 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த அட்டவணையிலே, 2022-23 நிதியாண்டுக்காக கொடுக்கப்பட்டுள்ள தகவல், 2022 டிசம்பர் மாதம் வரையிலான தரவுகளை மட்டுமே உள்ளடக்கியதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2022-23 நிதி ஆண்டு என்பது 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி 2023 மார்ச் மாதத்தில் முடிவதாகும். இதிலிருந்து, அது 2022-23 நிதியாண்டு முழுவதற்குமான தகவல் அல்ல, அது அந்த குறிப்பிட்ட நிதியாண்டிற்கான இடைக்கால தகவல் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. 



இதனால்  2022-23 நிதியாண்டு முழுமைக்குமான தரவுகளை இணையத்தில் தேடினோம். அப்போது தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ’2025-26 நிதியாண்டிற்காக செயல்திறன் பட்ஜெட்’ என்ற ஆவணத்தில் இது தொடர்பான தரவுகளைக் காணமுடிந்தது. 


2020 - 21 முதல் 2024 – 25 வரையிலான நிதியாண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு Scheduled Castes Sub Plan (SCSP) என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி பற்றியும் அதில் செலவு செய்யப்பட்ட நிதி பற்றியும் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 16442 கோடியில் 13259 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. அதாவது ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 80.64 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே 63.65% சதவீத நிதி செலவிடப்பட்டவில்லை என்ற தகவல் தவறானதாகும்.



மேலும் இதேபோல் 2023-24 நிதியாண்டில் 17105 கோடிகள் ஒதுக்கப்பட்டு 16827 கோடிகள் ( 98.37%) செலவிடப்பட்டுள்ளது; 2024-25 நிதியாண்டில் 19363 கோடிகள் ஒதுக்கப்படு 19122 (98.75%)  கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. 


2022-23 நிதியாண்டு முழுவதற்குமான தரவுகளைக் கொண்டு பார்க்கும்போது, ஒதுக்கப்பட்ட நிதியில் 80.64% செலவிடப்பட்டுள்ளது, 19.36% நிதி மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.



சிலர், மதுரைச் சேர்ந்த கார்த்திக் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக கேட்கும் போது அரசு கொடுத்த தரவுகளுக்கும்,  ’2025-26 நிதியாண்டிற்காக செயல்திறன் பட்ஜெட்’ ஆவணத்தில் அரசு கொடுத்துள்ள தரவுகளுக்கும் வேறுபாடு எப்படி வந்தது? இரண்டு வெவ்வேறு தரவுகளை அரசு கொடுத்ததா? அரசு பொய் சொல்கிறதா? என்று கேட்கிறார்கள். 



மதுரைச் சேர்ந்த கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக கேட்கும் போது, அரசு கொடுத்த தரவுகளில் இந்த தரவு 2022 டிசம்பர் வரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதாவது, அது 2022-23 நிதியாண்டு முழுவதற்குமான தரவுகள் அல்ல என்று குறிப்பிட்டே கொடுத்திருக்கிறது. 


3 ஆண்டுகள் பழைய தகவல் மற்றும் முழுமையில்லாத தகவலை வைத்து ஆதி திராவிடர் நலத்துறையின் நிதி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக தவறாக திரிக்கப்பட்ட தகவலை பரப்பி வருகின்றனர். 


முடிவு:


2022-23 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை மட்டுமே கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்ட இடைக்கால தரவுகளைக் கொண்டு, ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவில் திமுக அரசு செலவிடாமல் திருப்பி அனுப்புவதாக தவறான தகவலை பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.