YouTurn

சமீபத்தில் மணல் மாபியாவால் சமூக செயல்பாட்டாளர் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

சமீபத்தில் மணல் மாபியாவால் சமூக செயல்பாட்டாளர் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்த 10 ஆண்டுகள் பழைய சம்பவம்.

பரவிய செய்தி

‘திமுக ஆட்சியில் ரவுடிகள், அரசு அதிகாரிகள் கூட்டணியில் மண் திருட்டு நடக்கின்றது. அதனை தட்டிக்கேட்ட பிரபாகரன் என்ற செயல்பாட்டாளர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்துகிறார்கள், போலீஸ் அவர் மீது பொய் வழக்கு போடுகிறது. இந்த இந்த செய்தியை காட்டுத் தீயாய் பரப்புவோம். மனசாட்சி உள்ள ஒவ்வொரு இதயங்களிடமும் நீதி கேட்போம்’ - சரவணபிரசாத் பாலசுப்பிரமணியம், பாஜக ஆதரவாளர்.


Link / Archive Link

விரிவான விளக்கம்

ஒரு இளைஞர் மிக மோசமாக தாக்கப்பட்டிருப்பதை காட்சிபடுத்தும் புகைப்படங்களை பதிவிட்டு, ‘கோவையில் எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன், புதுப்பாளையம் கிராம குட்டையில்  பல மாதங்களாக சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து அவினாசி தாசில்தாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனால் ரவுடி கும்பல் பிரபாகரனை தாக்கியுள்ளனர். ஆனால் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் ரவுடிகளை விட்டு விட்டு பிரபாகரன் மீது பொய் வழக்கு போட்டனர். பின்னர் நீதிமன்றம் சென்ற இந்த வழக்கில், ரவுடிகள் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வாறு திமுக ஆட்சியில் ரவுடிகள், அரசு அதிகாரிகள் கூட்டணியில் மண் திருட்டு நடப்பதாக பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் பாலசுப்பிரமணியம் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பி வருகிறார்.



உண்மை என்ன?

 

‘செயல்பாட்டாளர் பிரபாகரன் மீது மணல் மாபியா தாக்குதல்’ என்று இணையத்தில் தேடியதில், ‘The Times of India’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்த செய்தியில், ‘மணல் திருட்டை எதிர்த்த செயல்பாட்டாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதற்காக அவினாசி தாசில்தார் மற்றும் புதுப்பாளையம் VAO பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மேலும் அதில், ‘பிரபாகரன் என்ற செயல்பாட்டாளர் அவினாசி தாசில்தாரிடம் மணல் திருட்டை தடுக்கக் கோரி முறையிட்டுள்ளார். மே 26ஆம் தேதி தாசில்தார் பிரபாகரனை சந்தித்துவிட்டு சென்ற சில நிமிடங்களில் பிரபாகரன் ரவுடிகளால் தாக்கப்படுள்ளார். ஆனால், பிரபாகரனை தாக்கிய ரவுடிகளை கைது செய்வதற்கு பதிலாக, அனுப்பர்பாளையம் போலீஸார் பிரபாகரன் மணல் லாரி மீது பெட்ரோல் குண்டு வீசியதாக குற்றம்சாட்டி அவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடந்திய போராட்டத்தால், செயல்பாட்டாளர் பிரபாகரனை பிணையில் விடுவித்துவிட்டு மணல் மாபியாவைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்ய போலீஸார் நிர்பந்திக்கப்பட்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து மேலும் தேடியபோது, இது தொடர்பாக ‘The Hindu’ செய்தித்தளத்தில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘புதுப்பாளையம் பாசன டேங்க்-ற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை பொறியாளர் அவினாசி தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது செயல்பாட்டாளர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்’ என்று தெரியவருகிறது. ‘மணல் திருட்டை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் புதுப்பாளையத்தில் மணல் திருட்டை தடுக்க தவறியதற்காக’ இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்த 10 ஆண்டுகள் பழைய சம்பவம் என்பது தெளிவாக தெரிகிறது.

 

முடிவு:

 

கடந்த 2015ஆம் ஆண்டு, அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பழைய சம்பவத்தை தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக திரித்து தவறாக பரப்பி வருகிறார் பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் பாலசுப்பிரமணியம்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.