யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்ரோ அமைப்பு 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தைக் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
பரவிய செய்தி
பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

விரிவான விளக்கம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பள்ளி மாணவர்களை இஸ்ரோவின் எதிர்கால விஞ்ஞானிகளாக உருவாக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் குறித்து பல ஆசிரியர்களுக்குத் தெரியாத நிலையில், இஸ்ரோ பள்ளி கல்வி இயக்குனர் திரு. பாலமோகன், ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மாணவர்கள் இஸ்ரோவில் பொறியாளர் பட்டப்படிப்பை இலவசமாகப் படித்து, அங்கேயே பணிபுரியும் வாய்ப்பைப் பெற முடியும். இந்தத் திட்டம் +1 படிக்கும் மாணவர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக எவிடன்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கங்களில் தேடிப் பார்த்தோம். இது குறித்தான எந்த தகவலும் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த செய்தி குறித்து keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ISROவின் இணையதளப்பக்கத்தில் 'யுவிகா' என்ற திட்டம் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மே 13, 2019 அன்று தொடங்கிய இந்த திட்டம், மே 25, 2019 அன்று முதல் பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து மொத்தம் 111 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், விண்வெளி பயன்பாட்டு மையம், வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் ஆகிய இடங்களுக்குச் சென்று மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த திட்டம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது ISROவின் இணையதள பக்கத்தில், யுவிகா- 2025க்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. வேறு எதுவும் தகவல் கிடைக்குமா என்று தேடிப் பார்த்த போது, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து குறைந்தபட்ச பங்கேற்பு உறுதி செய்யப்படும் என்றும், இந்த திட்டம் இஸ்ரோவின் ஏழு மையங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதில் இந்தியாவில் 9ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

முடிவு :
நம் தேடலில், இஸ்ரோ அமைப்பின் 'யுவிகா' என்ற திட்டத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது. எனவே இஸ்ரோ மூலம் +1 மாணவர்களுக்குப் பயிற்சி, இலவச பட்டப் படிப்பு வழங்குவதாகப் பரவும் தகவல் உண்மையில்லை.