யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவை தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவரே தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பரவிய செய்தி
திமுக ஐடி விங் வெளியிட்ட வீடியோவை கரூர் துயரத்திற்கு ஆதாரமாகக் காட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி திருமதி. அமுதா அவர்கள் திமுக ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டாரா? - தமிழ்நாடு பாஜக.

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தை அளித்தனர். அப்போது சில வீடியோ காட்சிகள் திரையிட்டு விளக்கமளித்தனர்.
இந்நிலையில் அதில் இடம்பெற்றிருந்த வீடியை ஒன்றை பதிவிட்டு, ‘இது திமுக IT Wing-ஆல் வெளியிடப்பட்ட வீடியோ. இதனை ஆதாரமாகக் கொண்டு அரசு அதிகாரி அமுதா ஐஏஎஸ் கரூர் சம்பவத்திற்கு விளக்கமளிக்கிறார். இவ்வாறு பேசும்படியாக அமுதா ஐஏஎஸ் திமுக ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டாரா?’ என்று தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறது.
திமுக ஐடி விங் வெளியிட்ட வீடியோவை கரூர் துயரத்திற்கு ஆதாரமாகக் காட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி திருமதி. அமுதா அவர்கள் திமுக ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டாரா? pic.twitter.com/rqZoTMuR25
உண்மை என்ன?
திமுக IT Wing வெளியிட்டதாக பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Dr. Prabhu Friends’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காண முடிந்தது. இந்த ‘Dr.பிரபு’ என்பவர் தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவார்.
இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி ஊடகங்களிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய போது எடுக்கப்பட்டது. அதில் ‘கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி 12 மணியளவில் மக்களை சந்திக்கவிருப்பதாக’ புஸ்ஸி ஆனந்த் கூறுகிறார்.

இதே வீடியோ தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் ‘Dr.பிரபு’-ன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இருப்பதை காணமுடிகிறது.
இதிலிருந்து இந்த வீடியோ திமுக IT Wing-ஆல் உருவாக்கப்பட்டு பரப்பப்படவில்லை என்பதும் இதனை தவெகவின் மாவட்ட செயலாளர் ஒருவரே தனது சொந்த சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
திமுக IT Wing வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு அதிகாரி அமுதா IAS, கரூர் கூட்ட நெரிசல் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்ததாக தவறான தகவலை தமிழ்நாடு பாஜக பரப்பி வருகிறது.