யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜகவின் S.G.சூர்யா திரிக்கப்பட்ட தவறான தகவல்களை பரப்பிவருகிறார்.
பரவிய செய்தி
தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டு பயண உருட்டும், உண்மையும் - பாஜகவின் மாநில இளைஞர் அணி தலைவர் S.G.சூர்யா.
விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அது குறித்து தமிழ்நாடு பாஜகவின் இளைஞர் அணித் தலைவர் S.G.சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ‘முதல்வர் ஜெர்மனி சென்ற போது தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மட்டுமே அவரை வரவேற்றார்.வேறு யாரும் அவரை வரவேற்கவில்லை’ என்றும் ‘ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre’ மூலம் நடத்தப்பட்ட கருத்தரங்கில் முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட பெரியாரின் உருவப்படத்தை, அந்த நிகழ்ச்சி முடிந்ததும் எடுத்துச் சென்றுவிடுவார்கள்’ என்றும் ‘ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. இவ்வாறு ஏற்கனவே மூடப்பட்ட ஒரு துறையின் நூலகத்தை முதல்வர் பார்வையிட்டதாக திமுகவினர் பரப்புகிறார்கள்’ என்றும் பேசியிருக்கிறார்.
தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டு பயண உருட்டும், உண்மையும். pic.twitter.com/2ded5FkBb2
உண்மை என்ன?
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றது பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். முதல்வர் லண்டன் சென்றிருந்த போது, அங்குள்ள லண்டன் வாழ் தமிழர்களால் வரவேற்பு அளிப்பட்டது குறித்து ‘News தமிழ்’ செய்தியின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல், முதல்வர் ஜெர்மனி சென்றபோது, ஜெர்மனி வாழ் தமிழர்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து வரவேற்பு அளித்தது குறித்து ‘Sun News’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதை காண்கிறோம்.
இதிலிருந்து, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினை அவருடன் விமானத்தில் சென்ற தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மட்டுமே வரவேற்றதாக S.G.சூர்யா கூறுவது தவறான தகவல் என்பது தெளிவாகிறது.
லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre’ மூலம் செப்டம்பர் 05 மற்றும் 06 தேதிகளில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு பெரியாரின் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த கருந்தரங்கும், உருவப்படத் திறப்பு நிகழ்ச்சியும் யாரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது, நிகழ்ச்சி முடிந்த பின்பும் இந்த உருவப்படம் கல்லூரியால் பாதுகாக்கப்படுமா என்பது குறித்து ‘YouTurn’ தரப்பில் இருந்து 'Asian Studies Centre'-ஐ மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டோம். அந்த பெரியார் உருவப்படம் ஆக்ஸ்போர்டின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் தான் வைக்கப்படும் என்று அவர்களால் அதிகாரப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.

இதிலிருந்து இந்த நிகழ்ச்சி முடிந்த உடன் பெரியாரின் உருவப்படத்தை கையோடு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்று S.G.சூர்யா திரிக்கப்பட்ட தகவலை பரப்புகிறார் என்பது தெரியவருகிறது.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மூடப்பட்டது குறித்து தேடினோம். ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, 2024 அக்டோபர் மாதத்தில் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தனது ஜெர்மனி பயணத்தின் போது கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை நூலகத்தை பார்வையிட்டது குறித்த செய்தி ஆதாரங்களும் இணையத்தில் இருக்கிறது. இந்த நூலகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், தமிழ் இதழ்கள், ஓலைச் சுவடிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘The Hindu' செய்தித்தளத்தில் 2021 ஜூலை மாதம் வெளியான செய்தியின் படி, கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை நிதி நெருக்கடி காரணமாக மூடப்படுவதாக தகவல் வந்தவுடன், முதல்வர் ஸ்டாலின் ரூபாய். 1.25 கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கினார் என்பதும் தெரியவருகிறது.
கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மூடப்பட்டதாக S.G.சூர்யா சொல்வது உண்மை தான் என்றாலும், முதல்வர் ஸ்டாலின் தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டதும் உண்மை தான் என்பது தெளிவாகிறது.
முடிவு:
முதல்வர் ஸ்டாலினின் அரசு முறை வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜகவின் S.G.சூர்யா திரிக்கப்பட்ட தவறான தகவல்களை பரப்பிவருகிறார்.