யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த ’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சரக்கு ஏற்றப்பட்ட லாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்படும் வீடியோவை பதிவிட்டு, ‘இது போன்று லாரிகளை சரக்கு ரயிலில் ஏற்றிச் செல்லும் முறை இந்திய இரயில்வே துறையால் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும்; இதனால் நேரம், எரிபொருள் ஆகியவை மிச்சமாகும், மேலும் சாலைகளில் வாகன நெரிசல் குறையும்’ என்றும் சமூக வலைதளத்தில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
சரக்கு ரயிலில் லாரிகளை ஏற்றிச் செல்லும் இந்த முறை ’Roll On-Roll Off’ என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி இணையத்தில் தேடுகையில், கடந்த 2020ஆம் ஆண்டில் ‘The Times Of India’ ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை காணமுடிந்தது. அதன்படி, இந்தியாவில் இந்த ’Roll On-Roll Off’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு 21 ஆண்டு நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனில், இன்றைய தேதியில் இந்த முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1999ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று முதன்முதலில் ’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாட் மற்றும் கோவாவின் வெர்னா ஆகிய பகுதிகளுக்கு இடையில் Konkan Railway Corporation Limited (KRCL)-னால் தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டில் ’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், கர்நாடகா மாநிலத்தின் சூரத்கல் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு இடையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

Konkan Railway Corporation Limited (KRCL)-ன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள தகவலின்படி, தற்போது இந்தியாவில் மூன்று வழித்தடங்களில் மட்டுமே ’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதேபோல், ’Roll On-Roll Off’ முறையில் சரக்கு கப்பல் போக்குவரத்தும் இந்தியாவில் சில பகுதிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, ’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து என்பது இந்தியாவிற்கு புதிதான ஒன்றல்ல என்பது உறுதியாக தெரியவருகிறது.
முடிவு:
’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து தற்போதுதான் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும். இந்த முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
