யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி விநியோகம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஆவின் பால் பாக்கெட் ஒன்றில் ‘சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ‘எப்போதும் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாத திமுக அரசு, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை ஆவின் பால் பாக்கெட்களில் வெளியிடுகிறது’ என்று பரப்பப்படுகிறது.
அடடா.. அதிசயமா இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து வருது ...ஓ தேர்தல் வரப்போகுது இல்ல ...இதுதான் திராவிடியாத்தனம் .. pic.twitter.com/xnZrCE5MSZ
உண்மை என்ன:
ஆவின் பால் பாக்கெட்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் இடம் பெற்றிருப்பது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். அப்போதும் ‘The Indian Express தமிழ்’ செய்தித்தளத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று வெளியான செய்தியைக் காணமுடிந்தது.
அதில் வெவ்வேறு வகையான ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அச்சிடப்பட்டுள்ள புகைப்படங்கள் இருப்பதை பார்க்கிறோம். மேலும், ‘2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை அமுல்படுத்தி வருவதைக்’ கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ‘Top Tamil News’ என்ற செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் படி, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அச்சிடப்பட்டிருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் ஆவின் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பால் பாக்கெட்கள் விநியோகம் செய்தது குறித்து நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது நிரூபணம் ஆகிறது.
முடிவு:
திமுக 2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆவின் பால் பாக்கெட்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் அச்சிட்டு விநியோகம் செய்து வருவதை மறைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு இவ்வாறு புதிதாக வாழ்த்துக்கள் வெளியிடுவதாக தவறாக பரப்பப்படுகிறது.