யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது அதிமுக ஆட்சியிலே அமலில் இருந்துள்ளது. மேலும், இந்த கட்டண வசூல் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் அமலில் இருக்கிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு சுற்றுப்பயணத்தின் போது, “இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு” என்று அவர் பேசிய வீடியோவை அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறது.
இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/jnKpJip9I0
உண்மை என்ன?
இது தொடர்பாக ‘Garbage Tax in Tamilnadu’ என்ற keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘The hindu’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2020 டிசம்பர் 23ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், ’2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியில் குடியிருப்பவர்கள், வணிகர்கள் திடக்கழிவு மேலாண்மைக்காக மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது ’திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் - 2019’-ன் அடிப்படையில் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தேடியதில் ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ‘மதுரையில் வீடுகளில் மற்றும் தொழில் இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைக்கு வரி விதிக்கும் நடைமுறை 2017ஆம் ஆண்டிலே அமலாகியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் குப்பைகள் தரம் பிரித்து சேகரிப்பட்டு உரம், இயற்கை எரிபொருள் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கென அதிகமாக செலவுகள் ஏற்படுவதால் இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக அப்போது காரணம் சொல்லப்பட்டது.

மேலும், பிற மாநிலங்களில் இவ்வாறு கழிவு மேலாண்மைக்காக மாநகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி தேடுகையில், கர்நாடக மாநிலத்தில் மைசூர், பெங்களூரு ஆகிய மாநகராட்சியில், 2025ஆம் ஆண்டிலிருந்து இந்த கட்டண வசூல் அமலுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது அதிமுக ஆட்சியிலே அமலுக்கு வந்துள்ளது தெரியவருகிறது. மேலும், இந்த கட்டண வசூல் கர்நாடகா போன்ற பிற மாநிலத்திலும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே (2017), தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அமல்படுத்திய ஒரே அரசு திமுக அரசு தான் என்று தவறான தகவலை மக்கள் மத்தியில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
