யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தை, கல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வங்கதேச கொடியை விற்பனை செய்தவரை தாக்கிய சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை வெளுதெடுத்த எல்லையோர பாதுகாப்புப் படை வீரருக்கு ராயல் சல்யூட் ..!

விரிவான விளக்கம்
கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வங்கதேச கொடியை விற்பனை செய்த இஸ்லாமியரை எல்லையோர பாதுகாப்பு படையினர் தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் வங்கதேச கொடியுடன் இருக்கும் ஒருவர் மீது, ராணுவ வீரர் தடியடி நடத்துவதை காண முடிகிறது.
மேற்கு வங்கத்தில் பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவனை பொளந்தெடுத்த எல்லையோர பாதுகாப்புபடை 💥
#WestBengal pic.twitter.com/XiWtvhgGaA
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கொல்கத்தாவில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Dhaka Post“ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி ஜூன் 12 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
இது குறித்து மேலும் தேடியதில், “Kalbela” ஊடகப் பக்கத்தில், கடந்த வாரம் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் வங்கதேசம் மற்றும் சிங்கப்பூருக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் தடியடி நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்நிலையில் சம்பவ இடத்தில், வங்கதேச கொடியை விற்பனை செய்த ஒருவரை ராணுவ வீரர் தவறுதலாக தடியடி நடத்தியதற்கு மன்னிப்பு கோரி, வங்கதேச ராணுவம் தற்போது பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் டாக்கா நஷ்டஈடு கொடுத்துள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் என்பதை, “Jugantor” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் மூலமும் உறுதிபடுத்த முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தை, கல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வங்கதேச கொடியை விற்பனை செய்தவரை தாக்கிய சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.