யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வாழப்பழங்களில் கரும்புள்ளிகள் தெரிவதை, இஸ்லாமியர்கள் வாழைப்பழங்களில் ஆண்மைக்குறைவு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மலிவாக விற்பனை செய்வதாகக் கூறி ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை இந்துத்துவாதிகள் பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
எச்சரிக்கை.. இந்துக்கள் கவனமாக தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்! இந்த வெறி பிடித்த கூட்டம் எப்படியாவது இந்துக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து வரலாற்று காலத்திலிருந்து இன்று வரை இவர்கள் மிக மோசமான கொலைகாரர்களாக மாறாமல் திருந்தாமல் இரக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்! இது பிசாசு கூட்டம் என்று தெளிவாக தெரிகிறது, குடிக்கும் தண்ணீர், பால் அனைத்து உணவு பொருள்கள் மாமிச உணவு வகைகள் பிரியாணி காய்கறி வகைகள் இப்படி அனைத்திலும் மகா பாதக செயலை இவர்கள் செய்து வருகிறார்கள்!
Whatsapp Message:
விரிவான விளக்கம்
“கர்நாடகாவில் வாழைப்பழங்களில் ஆண்மைக்குறைவு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மலிவாக விற்பனை செய்வதன் மூலம் இந்து சமூகத்திற்கு கடுமையான தீங்கு விளைவித்து வருகின்றனர். இதனால் இந்து குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். பழங்களை வாங்கும் போது கவனமாக இருங்கள். மத்திய அரசு சட்டத்தை கடுமையாக்கி நிரந்தர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் உங்கள் ஆண்மை இழக்கப்படும், அதை நீங்கள் ஒருபோதும் திரும்பப் பெற மாட்டீர்கள்!” என்று குறிப்பிட்டு 2:28 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் வாழைப்பழத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை ஒருவர் எடுத்து காண்பித்து, இதில் ஆண்மைக்குறைவு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மலிவாக விற்பனை செய்கிறார்கள் என்று கூறுவதையும் காண முடிகிறது.
🤮 कर्नाटक में स्लिम , हिंदू समुदाय को केले में नपुंसकता का इंजेक्शन लगाकर सस्ते में बेचकर गंभीर नुकसान पहुंचा रहे हैं जिससे हिन्दू बच्चे पैदा ना हो।
फल खरीदते समय सावधान रहें। यह समूह देश के लिए नासूर है। यह एक खतरे की घंटी है। केंद्र सरकार को कानून को कड़ा करना चाहिए और स्थायी… pic.twitter.com/8bR84GvMjc
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2022-ல் இது சம்பந்தமாக கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
அதில், “அனந்தபத்மநாபர் கோயிலுக்கு வாழைப்பழங்களை வழங்கும் ஒப்பந்தம் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு வழங்கப்பட்டதை அடுத்து ஒரு சர்ச்சை வெடித்தது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பரவி வரும் வீடியோவிற்கும், இந்த செய்திக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பான ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும் பரவி வரும் வீடியோவை நன்கு ஆய்வு செய்து பார்த்ததில், வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் (Black Spots) இருப்பது பற்றியே வீடியோவில் அவர்கள் பேசியிருப்பதை காண முடிந்தது. பொதுவாக வாழைப்பழங்கள் பழுக்க ஆரம்பிக்கும் போது மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். காலப்போக்கில், இவற்றில் எத்திலீன் உற்பத்தி அதிகரிப்பதன் விளைவாக மஞ்சள் தோலில் பழுப்பு அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றும். இவை இயற்கையான ஒரு நிகழ்வு. இதனை “News 18” வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் அதில், “மாறாக, வாழைப்பழங்களில் கருப்பு புள்ளிகள் தோன்றுவது கெட்டுப்போவதற்கான அறிகுறி அல்ல. இது TNF அதிகரித்த அளவைக் குறிக்கிறது, இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது. இந்த TNF ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டவும் உதவுகிறது. இதன் மூலம் கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழங்கள் சில வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் பங்கு வகிக்கக்கூடும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் இருப்பது நல்லதே என்பதை “Akshayakalpa Organic“ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலமும் அறிய முடிந்தது.
இதன்மூலம், வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் தெரிவதை, இஸ்லாமியர்கள் வாழைப்பழங்களில் ஆண்மைக்குறைவு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மலிவாக விற்பனை செய்வதாகக் கூறி ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை இந்துத்துவாதிகள் பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் பக்கத்தில், இஸ்லாமியர்கள் வாழைப்பழங்களில் ஆண்மைக்குறைவு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மலிவாக விற்பனை செய்வதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.