யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த செய்தி 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
இந்து சமய அறநிலையத்துறை திராவிட மாடல் நிர்வாகத்தில் 100 கிலோ தங்கம் மோசடி! திமுக ஆதரவு நாளிதழ் தினகரன் செய்தி

விரிவான விளக்கம்
'தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கத்தில் தேர், விமானம் ஆகியவை செய்யப்பட்டதில் 100 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் புகார்களை அறநிலையத்துறை மறைக்கிறது', என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஆதாரமாகக் காட்டி இந்த மோசடிகள் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததாக ’இந்து மக்கள் கட்சி’யின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ’எக்ஸ்’ தளத்தில் பரப்பிவருகிறார்.
உண்மை என்ன?
பரப்பப்படும் ’தினகரன்’ நாளிதழ் செய்தியின் கீழே ’Tue, 30 January 2018’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதிலிருந்து இந்த செய்தி 2018ஆம் ஆண்டு வெளியானது என்பது தெரியவருகிறது.

மேலும் இந்த செய்தியில், ’2012, 2013ல் சேலத்தில் உள்ள சிவன், அம்மன் கோயில் உட்பட 16 கோயில்களில் தங்கத் தேர் செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ஒரு குழு ஆய்வு செய்தது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மோசடிகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் தேடியதில், இது குறித்து ’One india’ செய்தித்தளம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. அந்தச் செய்தியில், 'கோயில்களில் தங்கத்தேர் செய்வதில் மோசடி நடந்ததாகக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மோசடி நடந்ததற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்ததாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘அந்த புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடந்ததாகச் சொல்லப்படும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளும், இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்ட 2018ஆம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறது. மே 2011 முதல் செப்டம்பர் 2014 வரை ஜெயலலிதாவும், பிப்ரவரி 2017 முதல் மே 2021 வரை எடப்பாடி பழனிசாமியும் அதிமுக சார்பில் முதலமைச்சர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து இந்த சம்பவம் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் என்பதும், இந்த செய்தி பழைய செய்தி என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தவை குறித்த பழைய செய்தியை, தற்போது திமுக ஆட்சியில் நடப்பதாகத் ’இந்து மக்கள் கட்சி’யின் தலைவர் அர்ஜுன் சம்பத் தவறாக பரப்பிவருகிறார்.