யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மாட்டு மூத்திரம் மனித உடலில் மருத்துவ ரீதியாக எவ்வாறு வினையாற்றும் என்பதற்கான விரிவான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை.
பரவிய செய்தி
கோமியத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன; காய்ச்சல் குணமாகும்;அஜீரணக் கோளாறு சரியாகும் - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி #kamakoti #Komiyam #chennaiIIT #News18Taminadu | http://News18Tamil.com

விரிவான விளக்கம்
மாட்டுச் சாணமும், மாட்டு மூத்திரமும் மிகுந்த மருத்துவப் பயன்கள் உடையவை என்று கருத்துருவாக்கம் செய்வது, சங்கப் பரிவாரின் மாட்டு அரசியலின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ’காய்ச்சல், அஜீரணக் கோளாறு போன்றவற்றை கோமியம் என்று சொல்லப்படும் மாட்டு மூத்திரம் குணமாக்கும் என்றும், அதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன' என்றும் கூறியது சர்ச்சைக்குரிய செய்தியாகியுள்ளது.
உண்மை என்ன:
முதலில், மாட்டு மூத்திரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் குறித்து இணையத்தில் தேடினோம். அகமதாபாத் இந்தஸ் (Indus) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது. அதில், மாட்டு மூத்திரத்தின் Anti microbial, Anti oxidant, Anti-inflammatory போன்ற மருத்துவ குணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆய்வுகள் பெரும்பாலும் சுண்டெலி (Mice), எலி (Rat) போன்ற விலங்குகளில் தான் ‘In vivo’ முறையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட மருந்து ஒன்று நேரடியாக மனிதன், விலங்கு, பறவை போன்ற உயிரிகளின் உடலில் செலுத்தி அதன் வினை என்னவாக இருக்கிறது என்று சோதித்துப் பார்க்கும் முறை ‘In vivo’ சோதனைமுறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகையில், மனிதர்கள் மாட்டு மூத்திரத்தை குடித்தப் பின்னர், அதன் மருத்துவ வினைகள் எவ்வாறு இருக்கும் என்பது இதுவரை விரிவான முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என்று இந்த ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வுக்கட்டுரை 2024ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இது மிக சமீபத்திய ஆய்வாகும். ஆனால், மேற்குறிப்பிட்ட மாட்டு மூத்திரத்தின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக குறிப்பான மூலக்கூறுகள் (Active components) எவை என்பது இதுவரை தெளிவாக நிறுவப்படவில்லை என்று குறிப்பிடுகிறது ஆய்வுக் கட்டுரை.
மேலும், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாட்டு மூத்திரத்தில் 14 வகையான ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால் அது நேரடியாக குடிப்பதற்கு தகுந்த ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளது.
மேலும், மாட்டு மூத்திரத்தின் மருத்துவப் பண்புகள் பற்றிய ஆய்வுகளில் கூட Cow urine distillate (CUD) என்பதுதான் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மாட்டு மூத்திரத்தில் உள்ள பல்வேறு கூறுகளை Distillation என்னும் முறையைக் கொண்டு பிரித்தெடுத்தப் பின் கிடைக்கும் திரவம் தான் Cow urine distillate (CUD). இதிலிருந்து மாட்டு மூத்திரத்தை நேரடியாக குடிப்பது தீங்கானது என்பது அறிவியல்ப்பூர்வமான உண்மை என்பது தெளிவாகிறது.

மேலும், ’Journal of Ethnobiology and Ethnomedicine’ என்ற ஆய்விதழிலில் வெளிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று, விலங்கு கழிவுகளின் மருத்துவப் பயன்பாடுகள் பண்டைய எகிப்திய, இந்திய, சீன, திபெத்திய, கிரேக்க, எபிரேய சமூகங்களின் பழமையான மருத்துவ மரபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. அந்த வகையில், லாவோஸ் நாட்டில் உள்ள சயாபூரி மாகாணத்தில் யானையின் சாணமும், மூத்திரமும் மருத்துவ ரீதியில் பயன்படுத்தப்படுவதை அந்த ஆய்வுக் கட்டுரை ஆராய்கிறது.
இவ்வாறு பல்வேறு மருத்துவ மரபுகளில் பல்வேறு விலங்குகளின் கழிவுகள் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பசு மாட்டின் மூத்திரத்தை மட்டும் சிலாகித்து பேசுகிறார் காமகோடி. மேலும், மாட்டு மூத்திரத்தின் எந்த மூலக்கூறுகள் எந்த மருத்துவ குணத்திற்கு காரணமாக இருக்கின்றது, அவை மனித உடலில் எவ்வாறு வினையாற்றும் என்பதற்கான விரிவான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை என்பது மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவ ரீதியான Validity இல்லை என்பதை காட்டுவதாக இருக்கிறது.
முடிவு:
இவ்வாறு மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத கருத்துகளை உண்மை போன்று திரித்துக் கூறியுள்ளார் சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி.