யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நிதியிலிருந்து தான் உலமாகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது.
பரவிய செய்தி
‘உலமாகளுக்கு பென்சன் வழங்க இஸ்லாமிய மத நிறுவனங்களின் பணத்தை எடுக்காமல், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து பணத்தை கொடுக்கிறது’ - எச்.ராஜா.
விரிவான விளக்கம்
NDTV தொலைக்காட்சி சார்பில் ‘Tamil Nadu summit’ என்ற பெயரில் முன்னணி அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி ஜனவரி 30ஆம் தேதி நடந்தது. அதில் பேசிய பாஜகவை சேர்ந்த எச். ராஜா, ‘தமிழ்நாடு அரசு கோவில்களுக்கு செலவு செய்ய கோவில் நிதியிலிருந்து பணம் எடுக்கிறது. ஆனால் உலமாகளுக்கு பென்சன் கொடுப்பதற்கு இஸ்லாமிய மத நிறுவனங்களின் பணத்தை எடுக்காமல், அரசு தனது சொந்த நிதியிலிருந்து கொடுக்கிறது’ என்று கூறினார்.
உண்மை என்ன?
எந்த நிறுவனத்தின் வழியாக உலமாகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது என்று இணையத்தில் தேடினோம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் இணையத்தளத்தில் ‘தமிழ்நாடு வக்ஃப் வாரியம்’ தொடர்பாக ஒரு பக்கம் இருப்பதை காணமுடிந்தது.

அதில் வக்ஃப் வாரியம் செய்ய வேண்டியதாக வரையறுக்கப்பட்ட செயல்பாடுகள் (Functions) குறிப்பிடப்படிருப்பதை காண்கிறோம். அதில், வக்ஃப் சொத்துக்களை புனரமைப்பு செய்வது, சுற்றுச் சுவர்கள் கட்டுவது, இடுகாடுகளை சுற்றி வேலி அமைப்பது போன்ற பணிகளை வக்ஃப் வாரியம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், உலமாகளுக்கு பென்சன் வழங்குவது, நீதிமன்ற உத்தரவின் பெயரில் இஸ்லாமிய பெண்களுக்கு பராமரிப்பு தொகை வழங்குவது போன்றவையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதை காண்கிறோம்.

மேலும், தமிழ்நாடு உலமா பென்சன் திட்டம் 1981-ன் படி, உலமா பென்சன் திட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் தான் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, உலமாகளுக்கு பென்சன் வழங்குவதற்கு பொறுப்பான நிறுவனமாக இருப்பதும் அதற்கு நிதியளிப்பதும் வக்ஃப் வாரியம் தான் என்பது உறுதியாகிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து உலமாகளுக்கு பென்சன் வழங்குவதாக எச்.ராஜா தவறான தகவலை பரப்பி வருகிறார்.