யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் அதிகாலை 5.31 மணியளவில் நடந்தது, அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பரவிய செய்தி
இருட்டில் நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்..
ஏழைகளுக்கு இல்லை அனுமதி!!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட,
பக்தர்களே திரண்டு வாரீர்!

விரிவான விளக்கம்
14 ஆண்டுகளுக்குப் பின்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 14ஆம் தேதி நடத்தப்பட்டது.
ஆனால் இந்த விழா நடந்து நான்கு மாதங்கள் கழித்து, ஒருவரிடம் பேட்டி எடுக்கப்பட்ட சிறிய காணொளியை பதிவிட்டு ’இந்த கும்பாபிஷேகம் இருட்டில் நடந்தப்பட்டது என்றும் அங்கே ஒரு சில பணக்காரர்களைத் தவிர ஏழை மக்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்றும் இந்து முன்னணி தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில் பரப்பிவருகிறது.
இருட்டில் நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்..
ஏழைகளுக்கு இல்லை அனுமதி!!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட,
பக்தர்களே திரண்டு வாரீர்!
நாள்: 30.11.25, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: 16 கால் மண்டபம்#திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #தீபமேற்றுவோம்… pic.twitter.com/bqL6mZlFlr
உண்மை என்ன?
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் குறித்து இணையத்தில் தேடியபோது, ’தந்தி டிவி’ செய்தித் தொலைகாட்சியின் யூட்யூப் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. 2025, ஜூலை 14ஆம் தேதி ’திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் - 2025’ என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதை காணமுடிகிறது.

மேலும் தேடியதில், ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் 2025 ஜூலை 14ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியைக் காணமுடிகிறது. அதன்படி, ஜூலை 14ஆம் தேதி அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதாக தெரியவருகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதாகவும், பக்தர்கள் விழாவைக் காணும் வகையில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டதாகவும், 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய செய்தி ஆதாரங்களிலிருந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் அதிகாலை 5.31 மணியளவில் நடந்தது என்றும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதும் உறுதியாகிறது.
முடிவு:
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் இருட்டில் நடந்ததாகவும், அதனைக் காண ஏழை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ’இந்து முன்னணி’ பொய்யான தகவலை பரப்பி வருகிறது.