யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 2020-21 ஆம் நிதியாண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்ததாக எச்.ராஜா பரப்பும் செய்திகள் தவறானவை. 2020-21 ஆம் நிதியாண்டில் இது 10.8 மில்லியன் டன்னாகவே இருந்துள்ளது.
பரவிய செய்தி
விவசாயிகளின் உழைப்பு மழையினால் வீணாகவில்லை, திமுக அரசின் அலட்சியத்தால் தான் வீணானது.
விரிவான விளக்கம்
பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா “திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், உச்சத்திலிருந்து அதலபாதாளத்திற்குச் சென்ற வேளாண் உற்பத்தி..! விளைந்த பயிர்களை மழையில் மூழ்கடித்து வேடிக்கை பார்த்ததின் விளைவே வேளாண்துறையின் வீழ்ச்சி” என்று குறிப்பிட்டு ஆண்டு வாரியான மொத்த உணவு தானிய உற்பத்தி சதவீதத்தைக் குறிக்கும் வரைபடம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 2020-21 ஆம் நிதியாண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்ததாகவும், 2023-24ஆம் நிதியாண்டில் அது 10.7 மில்லியன் டன்னாக குறைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
விவசாயிகளின் உழைப்பு மழையினால் வீணாகவில்லை, @arivalayam அரசின் அலட்சியத்தால் தான் வீணானது. pic.twitter.com/8Muny0awdE
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மாநிலவாரியான மொத்த உணவு தானிய உற்பத்தி தொடர்பான தரவுகள் குறித்து தேடினோம். அதில், 2004-05 ஆம் நிதியாண்டு முதல் 2024-25 ஆம் நிதியாண்டு வரையிலான தரவுகள் நமக்கு கிடைத்தது.
அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 2020-21 ஆம் நிதியாண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்ததாக என்பது குறித்து ஆய்வு செய்ததில், 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 10.8 மில்லியன் டன்னாகவே இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. எனவே எச்.ராஜா பரப்பிய 2020-21 ஆம் நிதியாண்டுக்கான தரவு தவறானது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் இது 2021-22 ஆம் நிதியாண்டில் 11.99 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்ததாக 2023-24 ஆம் நிதியாண்டில் இது 11.68 மில்லியன் டன்னாகவும் இருந்துள்ளது.

அதே சமயம் 2023-24 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 10.7 மில்லியன் டன்னாக இருந்துள்ளது உண்மையே. ஆனால் 2024-25 ஆம் நிதியாண்டில் இது 10.92 மில்லியன் டன்னாக மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், எச்.ராஜா தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி குறித்து பரப்பிய செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது.