யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை. தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இது இந்தோனேஷியா அருகில் இருக்கும் புற மாநகர் பகுதி...
இத யாருக்கெட்டாலும் நான் அப்புடித்தான் சொல்றேன்.. #4000கோடி_என்னாச்சு

விரிவான விளக்கம்
வங்கக் கடலில் நவம்பர் 27 ஆம் தேதி உருவான டிட்வா புயலினால், சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் மழையால் சென்னை வெள்ளம் வந்ததாகவும், இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்ததாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இது இந்தோனேஷியா அருகில் இருக்கும் புற மாநகர் பகுதி...
இத யாருக்கெட்டாலும் நான் அப்புடித்தான் சொல்றேன்.. 🖤❤️
(அறிவாலய அடிமை )
உபிய பாத்தியா,,
ராஜஸ்தான பாத்தியா,,
பீகார பாத்தியா,,
மபி பாத்தியா,,முதல்ல #தமிழ்நாட்ட பாருடா வெண்ண 😁😁 pic.twitter.com/R6uPl6ZsWa
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது The Hindu ஊடகத்தில் “Heavy rains in Gujarat; over 600 people shifted to safe places” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 26, 2024 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் அந்த புகைப்படத்திற்கு கீழே குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சாலையைக் கடந்து செல்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, Telegraph India ஊடகத்தில் “Monsoon misery: Rains spell woe from Gujarat to Tripura, Bengal to Maharashtra” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 26, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் குஜராத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ததால், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும், ராஜ்கோட்டில் கனமழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கிய சாலையின் வழியாக வாகனங்கள் செல்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் புகைப்படம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்டதாகும். இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.