யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு அரசு கிறிஸ்துவ மதபோதகர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அதேபோல், இந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கும், அதில் பயிலும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.
பரவிய செய்தி
’அர்ச்சகர்களை உருவாக்கும் வேத பாடசாலைகளுக்கோ, கிறிஸ்தவ மதகுருமார்களை உருவாக்குகிற அமைப்புகளுக்கோ அரசாங்கம் எந்த நிதி உதவியும் செய்வதில்லை. ஆனால் இஸ்லாமிய மதரஸாக்களுக்கு மட்டும் அரசாங்கம் நிறைய நிதி ஒதுக்குகிறது’ - ராம சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்.
விரிவான விளக்கம்
’பேசு தமிழா பேசு’ என்ற யூட்யூப் தளத்தின் விவாத நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் ராம் சீனிவாசன், வேலூர் இப்ராகிம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அதில் ராம சீனிவாசன், ‘அர்ச்சகர்களை உருவாக்கும் வேத பாடசாலைகளுக்கும், கிறிஸ்தவ மதகுருமார்களை உருவாக்குகிற தியாலஜிக்கல் பள்ளிகளுக்கும் அரசாங்கம் எந்த நிதி உதவியும் செய்வதில்லை. ஆனால் இஸ்லாமிய மதரஸாக்களுக்கு மட்டும் அரசாங்கம் நிறைய நிதி ஒதுக்குகிறது. இதனால் இந்த அரசாங்கம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று எண்ணி முஸ்லிம்கள் மகிழ்ச்சிதானே அடையவேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.
உண்மை என்ன?
முஸ்லிம் மதரஸாக்கள், கிறிஸ்துவ மதபோதகர்கள் ஆகியோருக்கு அரசு நிதியளிக்கிறதா? என்பது குறித்து தேடினோம். 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் செயல்திறன் அறிக்கையில் இது குறித்த விவரங்களை காணமுடிந்தது.
அதன்படி 2009ஆம் ஆண்டிலே ‘உலமா மற்றும் பணியாளர் நல வாரியம்’ அமைக்கப்பட்டு, அதன் கீழ் முஸ்லிம் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள், ஆலிம்கள், இமாம்களுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்து வருகிறது. இந்த நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த நிதியுதவி சென்று சேர்கிறது. அதேபோல், ’கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் தேவாலய ஊழியர்கள் நல வாரியம்’ 2022ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு கிறிஸ்துவ ஆலயங்களில் உள்ள மதபோதகர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது.

அதேபோல், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களிலிருந்து, கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகையும், அவர்களது பிள்ளைகள் உயர்கல்வி பயில ரூ.10,000 ரூபாய் உதவித்தொகையாக கொடுக்கும் திட்டத்தை திமுக அரசு முதன்முதலாக செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், கோவில் பணியாளர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் ஓய்வூதிமாக மாதம் 5000 ரூபாயும் மற்றும் குடும்ப ஓய்வூதிமாக மாதம் 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.

மேலும், திமுக 2021ல் ஆட்சிக்கு வந்ததும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்தது. இந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கக்கூடிய முழுநேர மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், பகுதி நேரமாக படிப்பவர்களுக்கு 5,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இதிலிருந்து, தமிழ்நாடு அரசு முஸ்லிம் மதரஸாக்களுக்கும், கிறிஸ்துவ மதபோதகர்களுக்கும் நல வாரியம் அமைத்து நிதியுதவி வழங்கி வருகிறது. அதைபோலவே, இந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கும், அதில் பயிலும் மாணவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கிறது என்பது தெரியவருகிறது.
முடிவு:
’வேத பாடசாலைகளுக்கோ, கிறிஸ்தவ மதகுருமார்களை உருவாக்குகிற அமைப்புகளுக்கோ அரசாங்கம் எந்த நிதி உதவியும் செய்வதில்லை’ என்று பொய்யான தகவலை பாஜகவின் ராம சீனிவாசன் பரப்பி வருகிறார்.