யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கோலாப்பூரில் உள்ள ஜோதிபா கோயிலில் பத்தர்களுக்கும் பூசாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடியாகும். இதற்கு இஸ்லாமியர்களுக்கு எந்த தொடர்புமில்லை.
பரவிய செய்தி
என்னா அடி. இரண்டுஅமைதி மார்கத்தினர் மாட்டுக் கறியுடன் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.
அங்குள்ள பூசாரிகளே அவர்களை வெளுத்துள்ளனர்..

விரிவான விளக்கம்
கோவில் வளாகம் ஒன்றில் பூசாரிகள் கும்பலாக சேர்ந்து ஒரு சிலரை தாக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கோவிலுக்குள் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாகவும், இதனை அறிந்த பூசாரிகள் அவர்களை தாக்கியதாகவும்’ இந்துத்துவவாதிகள் பரப்புகிறார்கள்.
என்னா அடி. இரண்டுஅமைதி மார்கத்தினர் மாட்டுக் கறியுடன் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.
அங்குள்ள பூசாரிகளே அவர்களை வெளுத்துள்ளனர்.. pic.twitter.com/XniuDwaZgs
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.
2026 மார்ச் 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், இந்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் உள்ள ஜோதிபா கோயிலில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பூசாரிகள் பக்தர்கள் சிலரை தாக்குவதாகவும், இந்த சம்பவம் குறித்த வேறு சில வீடியோக்களில் பக்தர்கள் பூசாரிகளை தாக்க முயற்சிப்பது பதிவாகியிருப்பதாகவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோலாப்பூரில் உள்ள கோடோலி காவல் நிலையத்தில் பதிவான FIR-ன் படி, பக்தர்கள் சிலர் உடைந்த தேங்காயை பூசாரிகளை நோக்கி வீசியதால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.
மேலும், பூசாரிகள் தரப்பில் அவர்கள் பூஜை செய்யும் போது பக்தர்கள் இடையூறு செய்ததாக கூறுகிறார்கள். அதேபோல், பக்தர்கள் தரப்பில் கோவில் கொடிமரத்தை நெருங்கவிடாமல் அவர்களை பூசாரிகள் தடுத்ததாகவும் அதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 17 பூசாரிகளும் 17 பக்தர்களும் என மொத்தம் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து பார்க்கும் போது, இது பூசாரிகள் பக்தர்கள் ஆகியோருக்கு இடையிலான சண்டை என்பதும் இதில் முஸ்லிம்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
கோவில் விழாவில் பூசாரிகளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் நடந்த சண்டையின் வீடியோவை திரித்து, முஸ்லிம்கள் கோவிலுக்குள் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதால் அவர்கள் தாக்கப்பட்டதாக இந்துத்துவவாதிகள் தவறாக பரப்பி வருகிறார்கள்.