யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன்னுடைய மகனுக்கு அங்கேயே நிச்சயம் செய்து வைத்த தாய்” என்று கூறி கலாட்டா ஊடகம் வெளிட்டுள்ள வீடியோ, உண்மையான சம்பவத்தோடு தொடர்புடையது அல்ல. இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோவாகும்.
பரவிய செய்தி
ஐயோ.! இப்ப என்ன பண்றது..? - மகனை காதலியுடன் பாத்த அம்மா ..மெட்ரோவில் வைத்தே அம்மா செய்த சம்பவம்

விரிவான விளக்கம்
மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன்னுடைய மகனைப் பார்த்த தாய் ஒருவர், கோபப்படாமல் அவர்களுக்கு அங்கேயே நிச்சயம் செய்து வைத்தார் என்று கலாட்டா, the bharat post போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Chalte Phirte என்ற யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 05, 2026 அன்று மெட்ரோ நிலையத்தில் திருமண விழா என்ற தலைப்பில் வெளியான பரவி வரும் வீடியோவை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள நபர், பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்று சித்தி மற்றும் சித்தாப்பாவிடம் கூறுகிறார். இதையடுத்து அவரது சித்தி மற்றும் சித்தப்பா மெட்ரோ நிலையத்திலேயே வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சிகிறார். இங்கு நடக்கும் நிச்சயத்தை வீடியோ எடுத்து அந்த பெண்ணின் அப்பாவுக்கு அனுப்பும்படி அந்த பெண்மணி கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து மேலும் தேடிய போது, ”Sidharth and diksha ki love story ( metro station par hua roka)” என்ற தலைப்பில் இது தொடர்பான முழு வீடியோவும் பிப்ரவரி 05, 2026 அன்று அதே யூடியூப் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதிலும் இதே காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து அவரது யூடியூப் பக்கத்தை ஆய்வு செய்து போது, இதே போன்று பல்வேறு வீடியோக்கள் வெளியாகியிருந்தது. மேலும் அங்கு கொடுக்கப்பட்டிருந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்று பார்த்த போது, Bioவில் Digital creator என்று குறிப்பிட்டுருந்ததையும் பார்க்கமுடிந்தது.

ஆனால் காணொளியில் இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டதாக எங்கும் கூறப்படவில்லை. எனவே இது குறித்து Chalte Phirte என்ற இன்ஸ்டாகிராம் ஐடி வைத்துள்ள நபரைத் Youturn தரப்பில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், "இது உண்மை சம்பவம் அல்ல. என்னிடம் மற்றவர்கள் பகிர்ந்துகொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இதை உருவாக்கினோம்" என்று தெரிவித்தார்.
முடிவு:
நம் தேடலில், “மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன்னுடைய மகனுக்கு அங்கேயே நிச்சயம் செய்து வைத்த தாய்” என்று கூறி கலாட்டா ஊடகம் வெளிட்டுள்ள வீடியோ, உண்மையான சம்பவத்தோடு தொடர்புடையது அல்ல. இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோவாகும்.