YouTurn

கரூர் சம்பவம் குறித்து பச்சையாக பொய்யை பரப்பும் ரெட் பிக்ஸ் யூட்யூப் தளம்!

கரூர் சம்பவம் குறித்து பச்சையாக பொய்யை பரப்பும் ரெட் பிக்ஸ் யூட்யூப் தளம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலும் அதனை மறைத்துவிட்டு ரெட் பிக்ஸ் யூட்யூப் தளத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட் பச்சையான பொய்யை பரப்பிவருகிறார்

பரவிய செய்தி

‘தவெக தலைவர் கரூர் சம்பவம் நடந்த அன்று நாமக்கல் நகரத்திற்கு  காலை 8.45 மணிக்கும் கரூர் நகரத்திற்கு பகல் 12 மணிக்கும் மக்களை சந்திக்க வருவார் என்று தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை’ -  பெலிக்ஸ் ஜெரால்ட்.


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்-ன் பிரச்சார பயணக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். 


இந்த கூட்ட நெரிசல் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து பேசிய போது, ’விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது’ என்று குறிப்பிட்டார். அதேபோல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் சார்பாக அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையிலும்,  பிரச்சார கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் மிக காலதாமதமாக வந்ததே முதன்மைக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் தளத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் தமிழ்க்குமரன் ஆகிய இருவரும் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விவாதிப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தவெக தலைவர் கரூர் சம்பவம் நடந்த அன்று நாமக்கல் நகரத்திற்கு காலை 8.45க்கும் கரூர் நகரத்திற்கு பகல் 12 மணிக்கு வருவார் என்று தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. அந்த நேரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டதாகும். அந்த நேரத்தில் விஜய் மக்களை சந்திப்பார் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை. இதனால் விஜய் 7 ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று சொல்லப்படவது உண்மை அல்ல’ என்று பேசியிருக்கிறார்கள். 


உண்மை என்ன? 


பெலிக்ஸ் ஜெரால்ட் குறிப்பிடும் தவெகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துப் பார்த்தோம். அதில், ‘மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம்’ என்று தான் குறிப்பிடப்பிடப்பட்டிருக்கிறது.


அதாவது, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் கட்சிக் குழுக்களின் விவரங்களும், நிகழ்ச்சி நடக்கும் நேரம், இடம் ஆகியவையும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள் வரவேண்டிய நேரம் என்று தனியாக எதுவும் குறிப்பிடவில்லை. 

மேலும், தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி ஊடகங்களிடம் பேசிய போது, ‘கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி 12 மணியளவில் மக்களை சந்திக்கவிருப்பதாக’ தெரிவிக்கிறார். 


தவெக கட்சியின் இளைஞர் அணி  (Tvk YouthWing) என்று பெயரிடப்பட்ட சமூக வலைத்தள பக்கத்திலும் இவ்வாறு நாமக்கலில் காலை 8.45 மணிக்கும் கரூரில் நண்பகல் 12 மணிக்கும் விஜய் மக்களை சந்திக்கவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ’தினத்தந்தி’ போன்ற முன்னணி செய்தி ஊடகங்கள் கூட நாமக்கலில் காலை 8.45 மணிக்கும் கரூரில் நண்பகல் 12 மணிக்கும் விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக செப்டம்பர் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது.


இதிலிருந்து கரூரில் பகல் 12 மணிக்கு விஜய் மக்களை சந்திக்கவிருப்பதாக தவெக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. 


முடிவு:


தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி பகல் 12 மணிக்கு கரூரில் மக்களை சந்திக்கயிருப்பதாக தவெக தரப்பிலே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளது. இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலும் அதனை மறைத்துவிட்டு ரெட் பிக்ஸ் யூட்யூப் தளத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட் பச்சையான பொய்யை பரப்பிவருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.