யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சியின் கடைசி 8 மாதங்கள் மட்டுமே பொறுப்பு DGP நியமிக்கப்பட்டிருந்தார். மற்ற காலங்களில் சைலேந்திரபாபு, சங்கர் ஜிவால் போன்றோர் DGP-களாக பணியாற்றியுள்ளனர்.
பரவிய செய்தி
2 வாரத்துல DGP நியமிச்ச “வேகம் காட்டும் அரசு” ஒரு பக்கம்..
5 வருஷமா DGP-க்கு “wait mode” போட்ட அரசு இன்னொரு பக்கம்..

விரிவான விளக்கம்
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த மே 29ஆம் தேதி மகேஷ்குமார் அகர்வால் என்ற காவல்துறை அதிகாரியை தமிழ்நாட்டின் DGP-யாக நியமித்தது.
இந்நிலையில், ’கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு புதிய DGP-யை நியமிக்காமல், தொடர்ந்து பொறுப்பு DGP-யை மட்டுமே திமுக அரசு நியமனம் செய்து வந்தது; ஆனால், ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே தவெக அரசு புதிய DGP-யை நியமனம் செய்துள்ளது’ என்று தவெக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
2 வாரத்துல DGP நியமிச்ச “வேகம் காட்டும் அரசு” ஒரு பக்கம்..
5 வருஷமா DGP-க்கு “wait mode” போட்ட அரசு இன்னொரு பக்கம்.. pic.twitter.com/Z6cVmD7RZ8
உண்மை என்ன?
2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. அதிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த DGP நியமனம் குறித்த செய்திகளைத் தேடினோம்.
‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின் படி, 2021 ஜூன் 30ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தமிழ்நாட்டின் DGP-யாக நியமனம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதேபோல், 2023 ஜூன் 30ஆம் தேதி சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் தமிழ்நாட்டில் DGP-யாக பொறுப்பேற்றதாக ‘Economic Times’ செய்தியின் மூலம் தெரியவருகிறது.

2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் பொறுப்பு DGP-யாக நியமிக்கப்பட்டார். ‘பொறுப்பு DGP என்ற கருத்து அந்நியமானது’ என்று 2006 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், யுபிஎஸ்சி பரிந்துரைத்த DGP நியமனத்திற்கான உத்தேச பட்டியலில் இருந்து மாநில காவல்துறை DGP தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதனால் அப்போதைய திமுக அரசு புதிய DGP-யை நியமிக்காமல் பொறுப்பு DGP-யை நியமித்தது விமர்சனத்திற்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மகேஷ்குமார் அகர்வால் என்ற ஐபிஎஸ் அதிகாரியை DGP-யாக நியமித்துள்ளது.
இதிலிருந்து, திமுக ஆட்சியின் கடைசி 8 மாதங்கள் மட்டுமே பொறுப்பு DGP நியமிக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக DGP நியமனம் செய்யப்படவில்லை என்று தவெக ஆதரவாளரால் தவறாக பரப்பப்படுகிறது.