யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2020ஆம் ஆண்டில் 4338ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை மறைத்து 1294 என்று பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
”அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது” - ’பேசு தமிழா பேசு’ யூட்யூப் சேனல்.
விரிவான விளக்கம்
’பேசு தமிழா பேசு’ என்ற யூட்யூப் சேனில் திமுக அதிமுக ஆட்சிகளில் நடந்த குற்றங்கள் குறித்து ஒப்பிட்டு பேசும் ஒரு வீடியோவில், ‘திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2856ஆக இருந்தது. 2020-ல் இந்த எண்ணிக்கை 1294ஆக குறைந்தது. அதாவது அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஆனால், அதே எண்ணிக்கை திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டில் 6064ஆக உயர்ந்திருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6968ஆக அதிகரித்தது. திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது’ என்று பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள தரவுகளை தேடினோம். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) ஆண்டு தோறும் இந்தியாவில் நடந்த பல்வேறு குற்றங்கள் பற்றிய தரவுகளை ‘Crimes in India’ என்ற ஆவணமாக வெளியிடும்.

அந்த வகையில், NCRB வெளியிட்டுள்ள ’Crimes in India - 2018’ ஆவணத்தின் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 2856ஆகவும், 2017ஆம் ஆண்டில் 3529ஆகவும், 2018ஆம் ஆண்டில் 4155ஆகவும் இருந்திருக்கிறது.

NCRB வெளியிட்டுள்ள ’Crimes in India - 2020’ ஆவணத்தின் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 4139ஆகவும், 2020ஆம் ஆண்டில் 4338ஆகவும் இருந்திருக்கிறது.

2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், NCRB வெளியிட்டுள்ள ’Crimes in India - 2023’ ஆவணத்தின் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 6064ஆகவும், 2022ஆம் ஆண்டில் 6580ஆகவும், 2023ஆம் ஆண்டில் 6968ஆகவும் இருந்திருக்கிறது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, அதிமுகவின் இறுதி ஆட்சிக்காலமான 2020ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 1294ஆக இருந்தது பொய் என்பது நிரூபணமாகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வந்திருப்பதையும் காணமுடிகிறது. அது எப்போது குறிப்பிடத்தக்க அளவில் குறையவே இல்லை என்பதையும் பார்க்கிறோம்.
முடிவு:
2020ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338ஆக இருந்தது. இதனை மறைத்து 1294ஆக இருந்ததாக பொய்யான தகவலை பரப்புகிறார்கள். மேலும் இந்த பொய்யான தகவலைக் கொண்டு அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.