யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் மேம்பாலங்களின் கீழ் பகுதியை மேம்படுத்தி அதில் பூங்கா திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுவது ஏற்கனவே திமுக, அதிமுக ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தான்.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடங்களை மேம்படுத்தி, அதில் பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை அமைக்குமாறு முதல்வர் விஜய் புதிதாக அறிவித்துள்ளார்.

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் பல மேம்பாலங்கள் இருக்கின்றன. அந்த மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், எனவே அந்த இடங்களை மேம்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் வண்ண விளக்குகளுடன் கூடிய பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை அமைக்குமாறு முதல்வர் விஜய் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
தமிழ்நாட்டில் மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதியை மேம்படுத்தப்படுவது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ‘The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், ’சென்னை கத்திபாரா மேம்பாலத்தின் கீழ் 14.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ’கத்திபாரா நகர்ப்புற சதுக்கத்தை’ அப்போதைய முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கத்திபாரா நகர்ப்புற சதுக்கம் (Kathipara Urban Square) உணவுக் கூடம், குழந்தைகள் விளையாடும் பகுதி, வாகன நிறுத்துமிடம், பேருந்து நிறுத்தம் போன்ற பல வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2024 ஜூலை மாதம் ’THE HINDU’ செய்தித்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ‘சென்னையில் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை 4.5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி அதில் பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) டெண்டர் அறிவித்ததாக’ அறிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல், தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக 2024 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பாக 558 கோடி ரூபாய் மதிபீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அப்போதைய முதலவர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டப்பணிகளில் மேம்பாலங்களின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணியும் சேர்க்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதியை இவ்வாறு மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு:
தமிழ்நாட்டில் மேம்பாலங்களின் கீழ் பகுதியை மேம்படுத்தி அதில் பூங்கா திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்படுவது ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தான். இதனை தவெக அரசு புதிதாக கொண்டு வந்ததாக சொல்லப்படுவது தவறான தகவலாகும்.